ஈயம் பித்தளை பேரீச்சம்பழமே - நோபல் பரிசு!
1974ஆம் ஆண்டு! ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சேட்டோவுக்கு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டபோது, ஜப்பானியர்களால் அதை நம்பவே முடியவில்லை.
‘அட! என்னப்பா இது? நம்ம தல, அமைதிக்காக அப்படி என்ன செஞ்சார்? அவருக்கு எதுக்கு நோபல் பரிசு அறிவிச்சிருக்காங்க?’ என்று ஜப்பானியர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.
உலக அமைதிக்காக ஐசாக்கு சேட்டோ என்ன செய்தார் என்று, உலக அளவில் பல்வேறு நாடுகளும் மண்டையைப் பிய்த்துக் கொண்டன.
நோபல் விருதுக்குழு உடனே ஒரு விளக்கம் அளித்தது.
‘1970ஆம் ஆண்டு என்.பி.டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக அளவில் அணுஆயுதப் பரவல் ஏற்படாமல் ஐசாக்கு சேட்டோ தடுத்திருக்கிறார்’ என்பதுதான் அந்த விளக்கம்.
உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு சட்டென ஒன்று புரிந்துவிட்டது. ஐசாக்கு சேட்டோ, அமெரிக்காவின் அடிவருடி. தாசானுதாசர். வியட்நாம்போரின்போது அமெரிக்காவை ஆதரித்தவர் அவர். நோபல் பரிசு பெற அவருக்கு இதைவிட பெரிய தகுதி வேண்டுமா என்ன?
அமைதிக்கான நோபல் பரிசு, ஐசாக்கு சேட்டோவுக்கு அறிவிக்கப்படும் முன்பே ஜப்பானில் அதற்கான சில முன் வேலைகள் நடந்தன.
‘தல! நீங்க ஓவரா அமெரிக்க அடிமையா இருக்கீங்க. அதனால இப்ப அமெரிக்காவோட பிடியில் இருக்கிற ஒகினவா தீவை திரும்பவும் ஜப்பான் கிட்ட ஒப்படைக்கச் சொல்லி கேளுங்க’ என்று அரசியல் ஆலோசகர்கள் அவருக்குச் சொல்லிக் கொடுத்தனர்.
ஐசாக்கு சேட்டோவின் தன்வரலாறு (பயோகிராபி) புத்தகம் ஒன்று விறுவிறுவென உருவாகியது. ‘இன் குவெஸ்ட் ஆப் பீஸ் அண்ட் ஃபிரீடம்’ என்ற அந்த புத்தகத்தை ஜப்பான் நாட்டு பேராசிரியர் ஹட்டொரி ரூய்ஜி சுடச்சுட தொகுத்தார்.
ஒரு நாட்டின் பிரதமர் என்றால் உலக அமைதி பற்றி எப்படியும் பேசியிருப்பார் இல்லையா? அந்த மாதிரியான அவரது சொற்பொழிவுகள், பேச்சுகள் சேகரிக்கப்பட்டு அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றன.
இப்போது ஐசாக்கு சேட்டோவுக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு என்று கேட்டால் டக்கென்று அந்த புத்தகத்தை எடுத்துக் காட்டிவிடலாம். எப்படி ஐடியா?
இந்த புத்தகம் தயாரான காலகட்டத்தில்தான் ஐசாக்கு சேட்டோவுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது. நோபல் விருது வென்ற முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஐசாக்கு சேட்டோ தனியாளாக நோபல் பரிசை வெல்லவில்லை. அவருடன், ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சீன் மேக்பிரைட் என்பவருக்கும் நோபல் விருது கூட்டாக வழங்கப்பட்டது.
சரி. சீன் மேக்பிரைட் உலக அமைதிக்காக என்ன செய்தார் என்று கேட்டுவிடாதீர்கள். நமக்கு எதுக்குங்க ஊர்வம்பு?
மோகன ரூபன்