சுவாமி விவேகானந்தரின் இறுதி மூன்று நாட்கள்!
தாம் உடலை விட இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்றார். மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை விட்ட பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்து விடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார்.இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை.
சடலத்தைத் துறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு சுவாமிகள் தாமே அமுது சமைத்து அதைத் தமது சிஷ்யர்களுக்கு வழங்கினார். சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். உணவு அருந்தியான பின்பு கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார்.
ஜூலை 4ஆம் நாள் அமெரிக்கா சுதந்திர தினமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரில் அமெரிக்க சிஷ்யர்களுடன் அவர்களது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிய போது சுவாமிகள் அதே ஜூலை 4 ஆம் நாள் நான்கு ஆண்டுகள் கழித்து தமது மேனியினின்று விடுதலை பெறப் போவதாக தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாள் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இப்போது வருவதாயிற்று. இந்த நாளை பஞ்சாங்கத்தில் விடுதலைக்குரிய நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று சிவராத்திரி.
ஜூலை 4ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு தியானம் செய்தார். ஜன்னல்களையும் மூடி வைத்துக் கொண்டார். இறுதிக் காலத்தில் சிறிது ஆகாரத்தை உண்பவர் வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார்.
அவ்வேளையில் குதூகலமாக அனைவருடனும் உரையாடியது பந்தியில் இருந்தவர்களுக்கெல்லாம் பரமானந்தத்தை ஊட்டியது. நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார். அன்று மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுவாமி விவேகானந்தர் இரண்டு மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார்.
மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து அனைவருடனும் ஆனந்தமாக உரையாடினார்.சந்தியா வேளை வந்தது. குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது.எல்லாரையும் அதில் கலந்து கொள்ளும்படி பணித்தார். சுவாமிகள் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார்.
அறையினுள் ஆசனம் விரித்து கிழக்கு முகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில் அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார். பிறகு “தியானம் செய்து கொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப் பகர்ந்தார்.
இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது.
இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார் . சாய்ந்து கிடந்த சரீரத்துக்கு என்னென்னவோ சிகிச்சை முறைகளை டாக்டர்களும், மற்றவர்களும் கையாண்டு பார்த்தார்கள்.நாசித் துவாரத்திலும், நாவிலும் இரண்டொரு துளி இரத்தம் கட்டியிருந்ததாகத் தென்பட்டது. குண்டலினி சக்தி பிரம்மரந்திரத்தைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கிச் சென்றதன் புற அடையாளமாக அது நிகழ்ந்திருக்கலாம். இதைப் பற்றிய செய்தி தந்தி வாயிலாக உலகில் பல இடங்களுக்குப் பறந்தது. கணக்கற்றோர் மறுநாள் காலையில் கல்கத்தா வந்து கூடினர்.
ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர். அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பிக்கப்பட்டது. நான் விரைவில் உடலை உகுத்து விட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன். I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகிர்ந்திருந்தார்.