For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மகாத்மா காந்தி அடிகளின் கடைசி நாள் குறிப்புகள்!

08:17 AM Jan 30, 2018 IST | admin
மகாத்மா காந்தி அடிகளின் கடைசி நாள் குறிப்புகள்
Advertisement

ன்றைய இந்தியாவின் அத்தனை ரூபாய் நோட்டுகளிலும் பொக்கை வாய் சிரிப்புடன் தோற்றமளித்து கொண்டிருக்கு மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் அழைக்கப்படும் காந்தியடிகள் 1948-ம் ஆண்டு இதே நாளில்தான் நம்மைவிட்டுப் பிரிந்தார். கோட்சே என்பவன் அவரை சுட்டு வீழ்த்தினான். நம் நாடு சுதந்திரம், வளர்ச்சி பற்றியே பெரும்பாலும் யோசித்து செயல்பட்டு கொண்டிருந்த காந்தி அந்த கடைசி நாளில் என்னென்ன செயல்களில் ஈடுபட்டார் என்பதை தெரிந்து கொள்வோமா?...

Advertisement

டெல்லியில் பெருமைக்குரியது பிர்லா இல்லம். இந்த இல்லத்தின் ஒரு அறையில் தேசப்பிதா மகாத்மா காந்தி தங்கி இருந்தார்.

Advertisement

அன்று 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்தார், எழுந்ததும் சிறிது நேரத்தில் தனது காலைக்கடனை முடித்துக் கொண்டார். பிறகு வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசமும், தேனும் கலந்து பருகினார். சிறிது நேரம் உலாவினார்.

காலை 10 மணிக்கு ஆட்டுப்பால், அரைவேக்காட்டில் வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச்சாறு, ஆரஞ்சுப்பழம் ஆகியவைகளை உட்கொண்டார்.

பின்னர் தனக்கு வந்த கடிதங்களைப் படித்தார். சிலருடன் பேட்டி, கட்சிப் பிரமுகர்களிடம் ஆலோசனை ஆகிய பணிகளில் ஈடுபாடு கொண்டார்.  தொடர்ந்து  பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். "தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார்.

குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார். பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார்.

தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். இலங்கை பிப்ரவரி 14_ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான்.

மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க்கொடுத்தார். 12 அவுன்ஸ்  ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது.காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார்.

ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார்.திடீரென்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. எனவே மனு காந்தி, "வேண்டாம். பாபு விரும்பமாட்டார்" என்று தடுத்தார். அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான்.

மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது. அவர் "ஹே... ராம்" என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார். அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார்.இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு "காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன" என்று தெரிவித்தார். இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துச்சாக்கும்

ஆக இதே ஜனவரி  30 அன்று மாலை 5.17 மணிக்கு காந்தியின் சகாப்தம் முடிந்தது.

லட்சக்கணக்கான மக்கள் அழுதனர்! ஆர்ப்பரித்தனர்! அஞ்சலி செலுத்தினர்!

அப்போது காலமான மகாத்மா காந்தியைப் போல் இன்னொரு உத்தமரை இந்தியாவோ, உலகமோ இன்றுவரை காணவில்லை- என்பதென்னவோ உண்மைதான்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement