For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

என் அனுபவத்தில் மொழிகள்..!

05:38 PM Feb 19, 2025 IST | admin
என் அனுபவத்தில் மொழிகள்
Advertisement

ள்ளியில் தமிழ் வழிக் கல்வி.கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி. வர்த்தகத்தில் பதினைந்து வருடங்கள். வட இந்திய நிறுவனங்களுடன் ஆங்கிலத்தில்தான் கடிதத் தொடர்பும், தொலைபேசித் தொடர்பும். தமிழில் எழுதுவதே தொழிலான பிறகு ஆங்கிலம் ஆங்கில நாவல்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் வாசிக்க உதவுகிறது.உலகின் எந்த மொழி திரைப்படத்தையும் இன்றைக்கு ஆங்கில சப்டைட்டிலுடன் பார்த்து ரசிக்க முடிகிறது.தென்னிந்திய மொழி திரைப்படங்களை தமிழ் மொழியில் ஆடியோ அமைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது.எனது கதைகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன. அந்த மொழிகளை நானே கற்று நானே மொழி மாற்றம் செய்ய என்ன அவசியம்?உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்புக்கு ஆங்கிலம் போதுமானதாக இருந்தது.

Advertisement

ஆங்கிலம் தெரியாது போடா என்கிற மனப்பான்மை கொண்ட சீனாவில் ஒரு பிளாட்ஃபாரக் கடைக்காரர்கூட செல்போனில் மொழி மாற்றிச் சொல்லும் ஆப்பை வைத்திருக்கிறார். வினாடிகளில் என் ஆங்கிலத்தை சீன மொழிக்கு மாற்றிச் சொல்லி, அவரின் சீனத்தை ஆங்கிலத்தில் எனக்கு மாற்றிச் சொல்கிறது. ஒரு வேளை எதிர்காலத்தில் நான் எம்.பி ஆனால் கூட நமது பாராளுமன்றத்தில் தமிழிலேயே சண்டை போடலாம். அத்தனை மொழிக்காரர்களின் வாதங்களையும் எனக்குத் தெரிந்த மொழியை அமைத்துக்கொண்டு கேட்கலாம்.தமிழ் நாட்டின் அத்தனைக் கடைகளிலும் வட இந்தியர்கள். அவர்களின் இந்தி நமக்குப் புரியவில்லை முதலில். இன்றோ அவர்கள் பானிபூரிக்காரர்கள் உள்பட தமிழ் கற்று விட்டார்கள்.

Advertisement

சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் மாணவர்கள் கற்ற, கற்கும் மூன்றாவது மொழியால் இன்னொரு மொழி தெரியும் என்பதைத் தவிர வேறு லாபமில்லை. என் இரண்டு மகள்களும் மூன்றாவது மொழியாக இந்தி படித்தார்கள். அவர்கள் வாழ்வில் அது உபயோகத்தில் இல்லை என்பதால் மறந்தே விட்டார்கள். வட இந்திய டூர்கள் செல்லும்போது மட்டும் தோடா தோடா பிரயோஜனம். நான் சென்ற பல வட இந்தியப் பயணங்களிலும் மொழி தெரியாமல் திக்குமுக்காடியதில்லை. பொருள்கள் வாங்க கால்குலேட்டர்களில் தொகையை டைப் செய்து காட்டி காரியம் முடிக்க முடியும். வழி விசாரிக்க கூகுள் மேப்பை விடவும் ஒரு நண்பன் உதவிவிடப் போவதில்லை.

திருக்குறள் எழுதப்பட்டது தமிழில். ஆனால் உலகின் அத்தனை மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதை திருவள்ளுவரேவா செய்தார்? பாரதியாருக்கு பல மொழிகள் தெரியும். ஆனால் தாய் மொழியில் மட்டும்தான் எழுதினார்.இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி போன்றவர்கள் இந்தி தெரியாமல் இந்திப் படங்களையே இயக்கியவர்கள். இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் உள்பட இஸ்ரோ விஞ்ஞானிகள் பலருக்கும் இந்தி தெரியாது.
மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்திதான் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லையே, ஏதாவது ஒரு இந்திய மொழி என்றுதானே சொல்கிறோம் என்பது அவர்கள் வாதம்.

நடைமுறையில்..அது சாத்தியமில்லை. மும்மொழி நடைமுறையில் இருக்கும் சிபிஎஸ்சி பாடத் திட்டத்திலும்கூட வழங்கப்படுகிற லிமிட்டட் வாய்ப்பில் ஒன்றுதான் தேர்வு செய்ய முடிகிறது.மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்பதாகவே வைத்துக்கொள்வோம். 50 பேர் கொண்ட ஒரு வகுப்பில் பத்து பேர் தெலுங்கு, பத்து பேர் மலையாளம், பத்து பேர் மராட்டி, பத்து பேர் கன்னடம், பத்து பேர் இந்தி கேட்கிறார்கள் என்றால் ஐந்து மொழிகளுக்கும் ஐந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மெஜாரிட்டி விருப்பத்தின் அடிப்படையிலேயே மூன்றாவது மொழி கற்றுத் தரப்படும். இந்த மெஜாரிட்டி சமஸ்கிருதம் அல்லது இந்தி மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய சூழல் வரும். இது மறைமுகமான திணிப்புதானே?

சரி..அப்படியே இந்தியை ஏற்றுக் கொள்கிறோம் என்றாலும் மேலே சொன்ன பல உதாரணங்களால் அதன் பயன் மிகக் குறைவு. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் ஏற்கெனவே ஆவெரேஜ்தான். இடைநிற்றல்கள் அதிகம் நடக்கின்றன. இதில் இன்னொரு மொழியும் கற்க வேண்டும் என்றால் அது மாணவர்களுக்கு கூடுதல் சுமை. இன்னும் இடை நிற்றல்கள் கூடும்.இந்தி என்கிற மொழி மீது யாருக்கும் எந்த வெறுப்பும் கிடையாது. அது இன்னொரு மொழி. நாட்டிற்குள் இந்தி பேசும் மாநிலத்தவருக்கு பயனுள்ள மொழிதான்.

வேற்று மொழி மாநிலத்தவருக்கும் இதைப் பொது விதியாக வற்புறுத்துவதுதான் தேவையற்றது. இந்தியை விரும்பி படிக்க நினைப்பவர்களுக்கு பள்ளிக்கு வெளியேயும் வாய்ப்புகள் இருக்கிறதே. இந்தி பேசும் மாநிலத்தில் வேலை வாய்ப்பு அமைந்தாலும் பேச்சு மொழி இந்தியை அனுபவத்தில் கற்க இயலும்.கூட்டிக் கழித்துப் பார்த்தால்..இந்தி என்று குறிப்பிடாமல் சொல்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்த மொழியாக இருந்தாலும் மூன்றாவது மொழி என்று ஒன்று அவசியமில்லை.

பட்டுக்கோட்டை பிரபாகர்

Tags :
Advertisement