குவைத்: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து-2 தமிழர்கள் உள்பட 41 பேர் பலி!
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குவைத் நேரப்படி இன்று காலை 6 மணிக்கு இந்த குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயில் இருந்து தப்பிக்க முயன்ற பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர். அதில் தீயில் கருகி 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த சுமார் 10 இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் . தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ வேகமாக பரவியது. இதனால் தீயில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்துள்ளனர். இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: குவைத்தில் நிகழ்ந்த தீ விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வருகிறது. நமது தூதர் அங்குள்ள முகாமிற்கு சென்றுள்ளார்; மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எங்களது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உதவி எண் அறிவிப்பு
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக +965-65505246 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.