For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குசு போவது நல்லது!

08:45 PM Aug 19, 2024 IST | admin
குசு போவது நல்லது
Advertisement

ம்மில் பெரும்பாலானோர் தினசரி அல்லது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை வாயுத்தொல்லை ஆகும். வயிற்றில் இருக்கும் இரைப்பையில் உணவு உண்ணுதல், நீர் பருகுதல், பழச்சாறு, மற்ற பானங்களை பருகுவதன் மூலமாக காற்று உண்டாகிறது. வயிற்றில் உண்டான காற்றை வெளியேற்ற மனித உடல் ஏப்பம் அல்லது காற்றினை பிரித்தெடுப்பது அதாவது பேச்சு வழக்கில் கூறினால், குசு போன்றவற்றின் வாயிலாக வெளியேற்றுகிறது.அதாவது ஆசனவாய் வாயு அல்லது நாம் அனைவரும் பொதுவாக கூறும் குசு என்பது ஒரு கெட்டவார்த்தையாக இல்லாவிட்டாலும், பொதுவிடத்தில் குறிப்பிடவோ பேசவோ தயங்கக்கூடிய விடயமாக உள்ளது. இருப்பினும், குசுவை பற்றி பேசாமல் அல்லது குசு விடாமல் இருக்க யாராலும் முடியாது. ஆம், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் குசு விடுகின்றன தெரியுமா? சரி, இப்போது நாம் குசுவை பற்றி பேசினாலும் பேசாவிட்டாலும், குசு என்பது நாம் அனைவரும் பொதுவாக வெளியேற்றும் ஒன்று. எனினும், பொது இடத்தில் வெளியேறிவிட்டால் அதனை அவமானமாக கருதுகின்றனர். உண்மையில், ஒரு நபர் தனது வசதிக்கேற்ப பொறுமையாக ஆசுவாசமாக குசு விட விரும்பினால், அவர் ஒரு தனிப்பட்ட இடத்திற்கு சென்று தான் சத்தமின்றி போட்டுவிட்டு வர வேண்டும். ஆனால் சிலரது குசு சத்தமே இருக்காது. ஆனால், அவர்கள் இருக்கும் பக்கத்திற்கு போகவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும். சரியாகி சொல்லப்போனால் துர்நாற்ற வெடிகுண்டு போட்டது போல இருக்கும். பலரும் பேச வெட்கப்படும் இந்த குசு மேட்டரை இன்று நாம் விரிவாக பேசுவோமா?

Advertisement

துர்நாற்ற குசு 1% மட்டுமே!

Advertisement

நம்ப முடியவில்லையா? உண்மையில், நாம் வெளியேற்றும் குசுவின் அளவில் துர்நாற்றம் வீசும் குசு என்பது நூற்றுக்கு ஒரு சதவீதம் மட்டுமே. நாம் விடும் குசுக்களில் 99% அதாவது நாம் அறிந்து விடும் குசு மற்றும் நாம் அறியாமல் விடும் குசு ஆகிய இரண்டிலுமே 99% துர்நாற்றம் வீசாத வெறும் வாயு ஆகும். கார்பன்டை ஒக்சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன், ஒக்ஸிஜன் மற்றும் மீத்தேன் ஆகியவை இந்த 99% இல் அடங்கும். ஹைட்ரஜன் சல்பைடு தான் 1% ஆகும். ஆனால் நாம் கவலைப்படுவது என்னவோ அந்த 1% ஹைட்ரஜன் சல்பைட்டுடன் வெளியேறும் நாற்ற குசுவிற்காகத்தான். இதனால் நமது கௌரவம், மானம், மரியாதை அனைத்தும் காற்றோடு கலந்துவிடுவதாக நினைக்கின்றனர்.

சாப்பாடு எதுவோ அப்படித்தான் குசுவும்!

முன்பெல்லாம் வகுப்பில் அல்லது ஸ்கூல் பஸ்ஸில் யாராவது குசுவிட்டு விட்டால் நாற்றம் வரும்போது, ​​மூக்கை மூடிக்கொண்டு முட்டை சாப்பிட்டியா என்று கேட்போம். எனவே முட்டைகளை சாப்பிடும்போது ​​அதிகமாக குசு விடுகிறோமா? தெரிந்தவர்கள் ஆம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், வெங்காயம், முட்டை மற்றும் இறைச்சிகள் அனைத்தும் அதிக அளவு சல்பரை கொண்டுள்ளன. சல்பர் கொண்ட உணவுகள் வயிற்றில் சமிபாடு அடையும்போது, அவை துர்நாற்றமுள்ள வாயுக்களின் வடிவத்தில் வெளிவருகின்றன. அதை நாம் முட்டை குசு என்கிறோம். சிலர் நீ இன்னைக்கு அவிந்த முட்டையா சாப்பிட்டாய் என்றும் கிண்டல் செய்வதையும் கண்டிருப்போம்.

குசு விடுவதில்லை என்று சொன்னால் அது பொய்!

” நாங்களென்றால் குசுவே விடுவதில்லை” என்றும் சிலர் கூறுவதுண்டு, அப்படி சொன்னால் அதை ஒரு காலமும் நம்பக்கூடாது. ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 14 முதல் 23 தடவை வரை குசுவிடுகிறார் என்று கூறப்படுகிறது. இது கொஞ்சம் ஆச்சரியம் தரக்கூடிய விடயம்தான். உண்மையில், நாம் முன்பு கூறியது போல் நாற்றம் என்று வரும்போது அது மிகக் குறைவு. அத்தோடு நாம் அறியாமல் விடும் குசுக்களும் உண்டு. உண்மையில், நம் உடலுக்குள் செரிமான அமைப்பு செயற்படும்போது உருவாகும் கழிவுகள் மட்டுமல்ல வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. நாம் சாப்பிட்டு விழுங்கும்போது நாம் அறியாமல் காற்று ஏன் வெளியிடப்படுகிறது? இது ஒரு ஆரோக்கிய பிரச்சினையாக இருக்குமோ என்றெல்லாம் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால், ஓரளவு வாயு வெளியேற்றம்/ குசு விடுவது இருப்பது மிகவும் ஆரோக்கியமானது. அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.

வெடிகுண்டா அல்லது குசுவா?

உண்மையில் குசு வெடிக்க முடியுமா? கோட்பாட்டளவில் பார்த்தால் அது நடக்கக்கூடும். சற்று யோசித்துப் பாருங்கள், வாயு வெளியேற்றத்தில்/ வெளியேறும் குசுவில் மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் இரண்டும் உள்ளன. இரண்டும் எரியக்கூடியவை. அப்படியானால் ஒரு பெட்ரோல் ஸ்டேஷனிற்கு போய் அங்கு ஒரு தீப்பெட்டியை பற்றவைப்பது போல, யாராவது தீப்பற்ற வைக்கும் நேரத்தில் குசு போனால் பற்றி எரிந்துவிடுமா என்றெல்லாம் பயப்படத்தேவையில்லை. நடைமுறையில், அத்தகைய வெடிக்கும் சந்தர்ப்பமெல்லாம் கிடையாது. அதற்கென்று குசுவிடும் போது எரிகிற தீக்குச்சியை பின்னால் வைத்து சோதித்து பார்க்க முயலாதீர்கள். ஆபத்தில் முடிந்துவிடும்.

குசுவின் வேகம் என்ன?

குசு எவ்வளவு வேகமாக வெளியாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இருப்பினும், ஒரு குசு என்பது பொதுவாக காற்றோடு காற்றாக கலக்கும் ஒரு விஷயமல்லவா? அது ஒரளவு வேகமாக வெளியாகுமல்லவா? அந்த வேகத்தை அளவிட்ட விஞ்ஞானிகள், குசுவின் சராசரி வேகம் நொடிக்கு 3.05 மீட்டர் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 கிலோமீட்டர் வேகம். ஆம், அது அவ்வளவு வேகமாக இல்லை என்றாலும் அதன் சத்தம் சற்று அதிகமாகும்.

துர்நாற்றம் அடித்தாலும் குசு போவது நல்லது!

ஒரு பொது இடத்தில், ஒரு கூட்டத்தில் வாயு வெளியேறுவது என்பது சற்று சங்கடமாக இருக்கும். ஆனால் குசு விடுவது உண்மையில் மோசமான விடயம் அல்ல. இது மிகவும் இயற்கையானது. நமது உடலின் வளர்சிதை மாற்ற செயற்பாட்டின் ஒரு பகுதியே இது. செரிமான அமைப்பின் ஒரு தயாரிப்பாகவும் உள்ளது. ஒன்று, மேலே குறிப்பிட்டுள்ள சராசரி வீதத்தை நீங்கள் குறைத்தால் எங்கள் உணவு சமநிலையில் இருப்பதாக நீங்கள் கருதலாம். அப்படி இல்லாமல் குசு தானாகவே போய்விட்டால் அது வீக்கம் போல் உணராது. இது குடல்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குசு அதிகமாகப் போவது ஏன்?

நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம். அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

Tags :
Advertisement