For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கும்பமேளா 2025 நிறைவு: செலவு எட்டணா- வரவு என்பதணா!

06:23 PM Feb 27, 2025 IST | admin
கும்பமேளா 2025 நிறைவு  செலவு எட்டணா  வரவு என்பதணா
Advertisement

2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்ற மகா கும்பமேளா புனிதமான மாபெரும் விழாவாகும். மகா கும்பமேளா 2025 சிறப்பு இந்தாண்டு நடந்த மகா கும்பமேளாவில் நான்கு கிரகங்களின் ஓரே கோட்டில் வந்திருந்தது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். பல பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் கூட இதில் புனித நீராடினர்.. இந்த நிகழ்வுக்கு வரும் பக்தர்களுக்காகக் கூடாரங்கள், கழிப்பறைகள், உணவு கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் செய்யப்பட்டிருந்தது. உலகின் பிரமாண்டமான, அமைதியான, ஒன்று கூடல், கோடிக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைத்தது. தங்களின் பாவங்களை நீக்கி ஆன்மீக விடுதலைப் பெறுவதற்குபக்தர்கள் புனித நதிகளில் நீராடினார்கள். கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் இந்தப் புனித நீராடல் நடைபெற்றது. 45 நாட்களில், 45 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட பக்தர்களின் வருகை அதிகரித்து நிறைவு நாளில் 66 கோடியை எட்டியது.

Advertisement

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் தவிர அனுமன் கோவில், அலோபி தேவி ஆலயம், மங்கமேஸ்வர் கோவில் போன்ற தொன்மையான கோவில்களும், அசோகர் ஸ்தூபி, அலகாபாத் பல்கலைக்கழகம், சுவராஜ் பவன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் யாத்ரீகர்களைக் கவர்ந்தன. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட காலாகிராம் எனப்படும் கலாச்சாரக் கிராமம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், கலை, கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சிகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருந்தன.

Advertisement

துறவிகளின் முகாம்களில், தியானம், விவாதங்கள், தத்துவ உரையாடல்கள் ஆகியவை இடம்பெற்றன. யாத்ரீகர்களுக்கு உரிய தகவல்களை அவ்வப்போது வழங்குவதற்கு டிஜிட்டல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ரோன் அணிவகுப்பு வானத்தில் விதவிதமான வடிவங்களை உருவாக்கி பக்தர்களை மெய்மறக்கச் செய்தது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிப்ரவரி 7 முதல் 10-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை, நட கலை நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கலாச்சார விருந்தை சமர்ப்பித்தனர். பாவங்களைப் போக்கவும் மோட்சத்தை அடையவும் வழி வகுப்பதாக நம்பப்படும் ஷாஹி ஸ்னான் என்னும் முக்கிய சடங்கை முன்னிட்டு லட்சக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். புனித கங்கை நதிக்கு ஒளிரும் விளக்குகளை காணிக்கையாக்கி வழிபடும் உலகப் பிரசித்தி பெற்ற கங்கை ஆரத்தி, திரளான பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது.

ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள், கூடாரங்களை அமைத்து மகா கும்பமேளா நடைபெற்ற பகுதி, தற்காலிக நகரமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அலைகடலென திரண்டு வந்திருந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கும்பமேளா பகுதியைச் சுற்றி சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட கண்காணிப்பின் வாயிலாக கும்பமேளா பகுதி முழுவதும் ஏழடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. துணை ராணுவப் படையினர், 14,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 50,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன், 2,750 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தடையற்ற போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய பிரயாக்ராஜ் மற்றும் அதை ஒட்டிய பிராந்தியங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகையைக் கையாள இந்திய ரயில்வே பாரிய செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜிற்கு தேவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ 1000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி) ஆகியவற்றைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் முக்கிய நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள், உயர்தர தொழில்நுட்பத்திலான கண்காணிப்பு கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு அர்ஜுன் ராம் மேக்வால், திரு ஸ்ரீபாத் நாயக் போன்ற மத்திய அமைச்சர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். மாநில முதலமைச்சர்களான திரு பஜன் லால் சர்மா (ராஜஸ்தான்), திரு நயப் சிங் சைனி (ஹரியானா), திரு என் பிரேன் சிங் (மணிப்பூர்), திரு பூபேந்திர படேல் (குஜராத்) ஆகியோரும் பங்கேற்றார்கள். டாக்டர் சுதான்ஷு திரிவேதி, திரு அனுராக் தாக்கூர், திருமதி சுதா மூர்த்தி, திரு ரவி கிஷன் முதலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர். இவர்களுடன், விளையாட்டு வீரர்களான சாய்னா நேவால், சுரேஷ் ரெய்னா, காளி என்ற தலிப் சிங் ராணாவும், பிரபல கவிஞரான குமார் விஷ்வாஸ், பிரபல நடன இயக்குனர் ரெமோ டி'சோசா, இந்தி திரைப்பட நடிகைகள் கத்ரீனா கைஃப், ரவீனா டாண்டன் ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள்.

புனித நிகழ்வு முடிவுக்கு வந்தாலும், பக்தி மற்றும் மகத்துவத்தின் எதிரொலிகள் வரலாற்றில் ஒரு நீங்காத முத்திரையை விட்டுச் செல்கின்றன.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்த மகா கும்பமேளாவில் சுமார் 65 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த மகா கும்பமேளாக்களில் இவ்வளவு கோடி பக்தர்கள் பங்கேற்றது இல்லை. மகா கும்பமேளா என்பது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பங்களித்துள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரும் இதன் மூலம் பலன் பெற்றுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் கூட கும்பமேளா சமயத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2013ல் நடந்த கும்பமேளா சமயத்தில் மாநில அரசு 1,017 கோடி ரூபாய் செலவழித்த நிலையில், 12,000 கோடி ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டது. 2025 மகா கும்பமேளாவுக்கு அரசு ரூ.7,500 கோடிக்கு மேல் செலவழித்த நிலையில், அதில் ரூ.2 முதல் 3 லட்சம் கோடி வரை வருமானம் வரும் என எதிர்பார்க்கிறது. இது உத்தரப் பிரதேச பொருளாதாரத்திற்கு மிக பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கிறது.

Tags :
Advertisement