தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பவதாரிணியின் குரலுக்கு AI மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்!

01:27 PM Jun 24, 2024 IST | admin
Advertisement

ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி 'திமிரி எழுடா' என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.

Advertisement

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், "பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்," என்று கூறினார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன் மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் 'ரங் தே பசந்தி'யில் இணைந்து இரண்டு தசாப்தங்களாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில், "பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து 'திமிரி எழுடா' பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது," என்றார்.

கிருஷ்ண சேத்தன் மேலும் கூறுகையில்: "குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்," என்றார். "கலைஞர்களுக்கு முன்னுரிமை" என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். "கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்," என்று கிருஷ்ண சேத்தன் தெரிவித்தார்.

Tags :
AIBhavatharniChinna Chinna KangalKrishnasethanThalapathy VijayTimeless voicesVenkat PrabhuYuvan S
Advertisement
Next Article