’கோழிப்பண்ணை செல்லத்துரை’- விமர்சனம்!
'திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். நம் முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்திப் போற்றுவதுதான் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப் பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். இச்சூழலில் அன்பும் பொறுமையும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதை லாஜிக் மீறல் மற்றும் முழுமையான ஒட்டுதல் இல்லாமல் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்
ஆண்டிப்பட்டி ஏரியாவைச் சேர்ந்த மிலிட்டரிமேன் ரியாஸ் விடுமுறையில் தனது மனைவி, குழந்த்தைகளைப் பார்க்க வீட்டுக்கு வருகிறார். அவருக்கு மகன் ஏகனும் மகள் சத்யாவும் இருக்கின்றனர். வந்த இடத்தில் ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரிய வர அவர்களை அடித்து துவைத்து விடுகிறார் ரியாஸ். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா அந்த நபருடன் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ரியாஸ் தனது பிள்ளைகளை அவரது பாட்டி வீட்டில் நிற்கதியாக விட்டுவிட்டு அவரும் ஊரை விட்டு சென்று விடுகிறார். இதையடுத்து அந்தப் பிள்ளைகள் அவர்களது தூரத்து உறவான பெரியப்பா யோகி பாபு உடன் கோழிப்பண்ணையில் வளர்கின்றனர். நாயகன் ஏகனும் அவரது தங்கை சத்யாவும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். இதில் சத்தியா கல்லூரியில் படித்து வருகிறார். ஏகன் யோகி பாபு சிக்கன் கடையில் கறி வெட்டும் நபராக வேலை செய்கிறார். நாட்கள் இப்படியே செல்ல பெரிய பெண்ணாக இருக்கும் சத்யாவுக்கு இன்னொரு நாயகன் சிவாவுடன் காதல் மலர்கிறது. . அம்மாவைப் போல தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடி தரப் போகிறாளா எனக் கோபப்படுகிறான் செல்லதுரை. இதன் பிறகு, சுதா என்ன முடிவெடுக்கிறார்? இதை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ கதை.
ஹீரோவாக வரும் ஏகன் நியூ பேஸ் போல் இல்லாமல் தனனல் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இந்த படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி ஆகி இருக்கிறார். இதில் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்வதை சீனு ராமசாமி கண்டுக் கொள்ளாதது ஏனோ? முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார் கோலிவுட் செட் பிராப்பர்டி யோகி பாபு. அவருக்கு வழக்கமான காமெடி காட்சிகள் இருந்தாலும் அந்த கால வி. கே. ராமசாமி பாணியில் பெரியப்பாவாக ஆக்ட் கொடுக்க ட்ரை பண்ணி இருக்கிறார். தங்கையாக நடித்த சத்யா தேவி கச்சிதமான நடிப்பை வழங்கி கவர்கிறார். நாயகியாக நடித்த பிரிகிடா எல்லை மீறிய நடிப்பை வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் லியோனியின் மகன் சிவா மதிக்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். படத்தின் நகைச்சுவை டிபார்ட்மெண்ட்டை கையில் எடுத்திருக்கும் குள்ள மனிதர் குட்டிப்புலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காமெடியில் கலக்கி இருக்கிறார்.
இப்போதைய ட்ரெண்டாகிப் போன ஆபாச வசனங்களும், அடி,தடி, ரத்தம் தெறிக்கும் வன்முறைகளும் இல்லாதது என்பதே இப்படத்தின் பலம்..!
எதிர்பார்ப்புக்கும் மேல் ஸ்லோவாக போனாலும் குடும்ப ஆடியன்ஸை நிச்சயம் கவர்வான் இந்த 'கோழிப்பண்ணை செல்லத்துரை' .
மார்க் 3/5