கொட்டுக்காளி- விமர்சனம்!=இது உலகத் தரமான படமல்ல!
வழக்கமான திரை மொழியில் சொல்லப்பட்டிருக்காது. பின்னணி இசை இருக்காது. எண்பதுகளின் மலையாளப் படங்கள் போல காட்சிகள் மெதுவாகத்தான் நகரும். ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் இடையில் ஸ்டே எனப்படும் தேக்கம் வலிய வைக்கப்பட்டிருக்கும்.ஒரு சேவலை கதாநாயகியின் குறியீடாக படம் முழுதும் காட்டுவார்கள். மெனெக்கெட்டு வசனம் எழுதாதது போல மெனெக்கெட்டு வசனம் எழுதப்பட்டிருக்கும். எதார்த்தமான நடிப்பை வாழ்ந்திருப்பதாகச் சொல்வார்கள். இதில் நடிகர்கள்..தவறு..பாத்திரங்கள்..தவறு..மனிதர்கள் வாழ்ந்திருப்பதை ரகசியமாக படம் பிடித்திருப்பார்கள்.
பத்து நிமிட குறும்படத்திற்கான கதையை 104 நிமிடங்கள் வேகமின்றி வாழ்வியலுடன் சொல்லியிருப்பார்கள்.
இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் ரசிப்பீர்கள். இல்லையென்றால் கடுப்பாவீர்கள்.
நீங்கள் இந்தப் படத்தை ரசித்தீர்கள் என்றால் நீங்கள் மேம்பட்ட ரசனையாளர் என்றோ, ரசிக்கவில்லை என்றால் ரசனையே இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை.பல வகை கதைகள் எழுதப்படுகின்றன. சுந்தர ராமசாமியையும், லா.சா.ராவையும் ரசிப்பவர்களும், புரியவில்லை என்று நிராகரிப்பவர்களும் இங்குண்டு.அப்படி.. இது வேறு வகைப்படம். எல்லோருக்கும் பிடிக்க அவசியமில்லை. பிடிக்க வேண்டும் என்று படக் குழு எதிர்பார்ப்பதும் சரியில்லை.
படத்தின் விழாவில் சில முக்கிய இயக்குனர்கள் முக்கி முக்கி 500% பாராட்டியதால் உருவாக்கப்பட்ட அநியாய எதிர்பார்ப்புடன் வந்து பார்த்தவர்களில் பலரும் எரிச்சலடைந்ததைப் பார்க்க முடிந்தது. கெட்ட வார்த்தைகளும் உதிர்ந்தன. விருதுகள் பெற்ற படம் என்றால் அதை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும், வெகுஜனங்களும் ஏன் பார்க்கக் கூடாது? என்கிறார் சூரி.
சூரி அவர்களே.. மீன் மார்க்கெட்டில் காய்கறி வாங்கச் சொல்வதும், காய்கறி மார்க்கெட்டுக்கு நடுவில் மீன் விற்பதும்.. இரண்டுமே பொருந்திப் போகாது. சரி.. இது உலகத் தரமான படம்தானா? விவாதத்திற்குரியதே!எடுத்துக்கொண்ட ஒரு கதையை எந்த விதத்தில் வேண்டுமானாலும் திரைக்கதை அமைத்துச் சொல்லலாம். அது இயக்குனர் உரிமை. கதையின் முடிவை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்று அந்தரத்தில் படத்தை முடிப்பதை ஒரு கிம்மிக்ஸ் உத்தி என்றுதான் பார்க்க முடியுமே ஒழிய.. ஓர் இயக்குனர் தான் சொல்ல வந்ததை ஏதோ ஒரு முடிவு வைத்துச் சொல்வதுதான் நியாயம் என்று படுகிறது.
சூசகமாக, குறியீடு மூலம் ஒரு முடிவு சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளச் சொல்வது சரியல்ல என்பது என் கருத்து.