ஜப்பானில் அதிகரிக்கும் கொடோகுஷி சொல்லும் பாடம்!
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பம் அல்லது துணையில்லாமல் தனியாக வாழ்பவர்களின் மரணமே "கொடோகுஷி" என்று அழைக்கப்படுகிறது. ஒரு கோடோகுஷி இறக்கும் போது, பொதுவாக அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வதால், அது யாருக்கும் தெரியாமல் நடக்கும். வழக்கமாக, இவர்களின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், சில சந்தர்ப்பங்களில் 3 மாதங்கள் வரை கடக்கக்கூடும். "கொடோகுஷி" என்றால் தனித்துவிடப்பட்ட அநாதை மரணங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
தற்போது ஜப்பானில் இருந்து வெளிவந்துள்ள செய்தி - நமது சிந்தனையையும் செயலையும் இன்னும் சீரமைத்துக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன்
2024ஆம் வருடத்தின் முன்பாதியில் சுமார் நாற்பதாயிரம் முதியோர் வீட்டில் தனியாக மரணமடைந்து பிறகு அரசாங்க ஊழியர்களால் இவர்களின் பிரேதங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இதில் 4000 முதியவர்களின் பிரேதங்கள் - இறப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதம் கழித்து அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
130 முதியோரின் பிரேதங்களை கைப்பற்ற இறந்த பிறகு ஒரு வருடம் வரை எடுத்துக் கொண்டுள்ளது என்பதை நம்மால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.
உலகத்திலேயே முதியவர்கள் அதிகமாக வாழும் நாடாக ஜப்பான் உள்ளது. அந்த வகையில் இவ்வாறு இறந்த பின்பு கைப்பற்றப்பட்ட பிரேதங்களில்
7498 பேர் 85 வயதைத் தாண்டியோர்
5920 பேர் 75-79 வயதினர்
5635 பேர் 70-74 வயதினர்
அதே சமயம் அந்த நாட்டில் 2050 இல் சுமார் ஒரு கோடி பேர் 65 வயதைத் தாண்டி அவர்கள் வீடுகளில் தனியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டிருக்கிறது அந்நாட்டு அரசு. அனைத்து வயதினரையும் சேர்த்து 2050இல் ஜப்பானில் சுமார் 2கோடி பேர் வீடுகளில் தனியாக வாழ்ந்து வருவார்கள் என்றும் திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.
"ஜப்பானின் பிறப்பு விகிதம் அபாயகரமான அளவில் குறைந்திருப்பதால் ஒரு சமூகமாக இயங்கும் சக்தியை ஜப்பான் இழந்து வருகிறது" என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்
இருபது வருடங்களுக்கு முன்பே இந்த நிலை ஜப்பானில் ஆரம்பித்து விட்டது. அங்கு இறந்த முதியவர் ஒருவரின் உடல் மூன்று வருடங்களாக வீட்டுக்குள் இருந்திருக்கிறது. அவரது வீட்டு வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை தானியங்கி வங்கிக் கணக்குகள் மூலம் பிடித்துக் கொள்ளப்பட்டது. வங்கிக் கணக்கு முழுவதுமாக முடிந்ததும் தான் போலீஸ் வீட்டுக்கு வந்து நபர் இறந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டதைப் பார்த்திருக்கிறது.
ஏன் இத்தகைய நிலை ஏற்பட்டது?
ஜப்பானில் இளையோர் திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவது குறைந்து போனது. அதாவது நல்ல வேலைவாய்ப்பு இன்மை , குடும்பத்தை கவனித்துக் கொள்ள போதுமான வசதி வாய்ப்பு இல்லாமை, திருமணம் போன்ற கமிட்மெண்ட்கள், பிறகு குழந்தை குட்டிகளை வளர்க்க வேண்டும் போன்ற கூடுதல் சுமைகள் வேண்டாம் என்று நினைப்பதால் தொடர்ந்து வருடா வருடம் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
மேலும் ஆசிய நாடுகளின் மரபுப்படி திருமணம் கடந்த உறவுகளில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது மேற்கத்திய நாடுகள் போன்று இங்கு வழக்கில் இல்லை என்பதால் திருமணங்கள் சரிவதால் குழந்தைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜப்பானில் 2023 ஆம் ஆண்டு 7,58,631 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2022 ஐ ஒப்பிடும் போது 5.1% குறைவு . ஜப்பான் தனது பிறப்பு இறப்பை பதிவு செய்யத் தொடங்கிய 1899 ஆம் ஆண்டில் இருந்து இத்தகைய சரிவைக் கண்டதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் கூட கண்டதில்லை என்பது தான் வியப்பு. கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவு திருமணங்களின் எண்ணிக்கை 5.9% குறைந்துள்ளது.
காரணம் ஜப்பானியர்கள் தனிமை விரும்பிகளாம். குழந்தைகள் அழுவதையும் , குழந்தைகள் வெளியே விளையாடுவதைக் கூட தாங்கிக் கொள்ளாத அளவு தனிமை விரும்பிகளாக இருப்பார்கள் என்று இளம் தம்பதிகள் பதிவு செய்கின்றனர். இதை எல்லாம் தாண்டி அக்கம்பக்கத்து வீட்டினர் கூட பேசிப்புழங்காமல் பல ஆண்டுகள் கூட தனிமையில் இருப்பார்களாம்.
இதன் மூலம் நமக்கான பாடங்கள்
இளம் வயதில் திருமணங்கள் இங்கும் பல காரணங்களால் தடை படுகின்றன. பொருளாதாரம் , வேலை , சம்பளம், வரதட்சணை என்று பல காரணங்கள் நமது நாட்டிலும் திருமணங்களை இல்லாமல் ஆக்கி வருகின்றன. வேலை வாய்ப்பு உறுதியின்மை, பணவீக்கம்; அடிப்படை தேவைகளுக்கான விலை உயர்வு;
கல்வி- சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவினம் போன்ற காரணங்களால் திருமணம் நடந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வம் குறைந்து வருவதைக் காண முடிகின்றது.
அண்டை வீட்டார் என்பவர் நமது உறவினர் போன்றவராவர் அவர்களுடன் நல்லுறவை மேம்படுத்துவது நமது கடமை.
இதை எல்லாம் தாண்டி நமது பிள்ளைகளுக்கு பணம் சம்பாதித்தல் ,புகழ் ஈட்டுதல் ஆகியவற்றை மட்டுமே கற்றுக் கொடுக்காமல் முதியோரை மதித்தல்
வரலாற்றில் நாம் கற்கும் பாடங்கள். மனித உயிரின் மதிப்பு, பிறர் வலியை உணர்தல், பிறருக்கு இரங்குதல்,மரணம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை தொடர்ந்து ஏற்படுத்தி வர வேண்டும்.
ஆக கொடுமையில் பெருங்கொடுமை: இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும். எனவே நமது சமூகம் அதன் தன்மையில் இருக்க குழந்தைகள் பிறக்க வேண்டும் - இளையவர்கள் நிரம்பி இருக்க வேண்டும் - முதியோர்கள் தனிமையில் விடப்படாமல் மதிப்பான மரணத்தை எய்த வேண்டும். இன்றைய திருமணங்களை பல காரணங்களால் நடக்கவிடாமல் செய்து கொண்டிருப்போர் அனைவரும் நாளை தனிமையில் தான் மரணிக்க வேண்டும் என்ற பாடத்தை ஜப்பான் நமக்கு உணர்த்துகிறது. பாடம் கற்போம்.