For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்! -முழு விபரம்!

08:20 AM Jan 20, 2024 IST | admin
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்   முழு விபரம்
Advertisement

தமிழக தலைநகராம் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான சுடரை ஏற்றி வைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..நேற்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதைதொடர்ந்து, சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை, விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது::

இந்தியாவில் விளையாட்டுக்களின் வளர்ச்சியில் தமிழகத்துக்கென தனி இடம் உண்டு. இது சாம்பியன்களை உருவாக்கும் பூமி. எத்தனையோ விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணில் தோன்றியுள்ளனர். ஒவ்வொரு விளையாட்டிலும் செயற்கரிய செயலைச் செய்து காட்டியுள்ளனர். உலகளவில் சிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை காண வேண்டும் என்று நினைக்கிறோம். இதற்காக தொடர்ந்து பெரிய பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை அதிகப்படுத்த வேண்டும்.

கேலோ இந்தியா போட்டிகளில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்குவாஷ், தமிழகத்தின் பழமையான கவுரவம் மற்றும் மரபு சார் விளையாட்டின் சின்னமான சிலம்பத்தை காண ஆர்வம் பெருகுகிறது. இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக வீரமங்கை வேலுநாச்சியார் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையைச் சேர்ந்த ஒருவர் சின்னமாக ஆக்கப்பட்டுள்ளது இதுவரை அறியப்படாத ஒன்றாகும்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் பதக்கங்கள் குவிக்கப்பட்டதோடு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அரசு அவர்களுக்கு துணையாக இருந்தது. முந்தைய விளையாட்டுக்களின் வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, விளையாட்டு வீரர்களை செயல்பட வைத்தோம். விளையாட்டுக்கான ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இப்போது, நமது பார்வை இந்தாண்டு பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜெல்சிலும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் மீதே உள்ளது. நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும். உலக விளையாட்டு சூழலமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. எனவே 2029-ம் ஆண்டில், இளைஞர்களுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

விளையாட்டுக்கள் மிகப்பெரிய பொருளாதாரமாகும். இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பல சாத்தியக் கூறுகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக ஆக்கும் உத்தரவாதத்தை நான் அளித்துள்ளேன். இதில், விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பதே நமது முயற்சியாகும்.

நாட்டின் புதிய தேசிய கல்வித் திட்டத்தில் விளையாட்டுக்களை முக்கிய பாடத் திட்டத்தின் அங்கமாக ஆக்கியுள்ளளோம். இதன் காரணமாக விளையாட்டுகளை ஒரு வாழ்க்கைத் தொழிலாக தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு சிறு வயது முதலே வருகிறது. விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பிலும் இந்தியா தற்சார்புடையதாக மாற வேண்டும் என்பதே நமது முயற்சியாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுக்கள் தொடர்பான துறைகளில் தங்கள் எதிர்கால தொழில் பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்துக்கு எனது உத்தரவாதம் உண்டு. நம்மால் தகர்க்க முடியாத எந்த ஒரு சாதனையும் கிடையாது. இந்தாண்டு நாம் புதிய சாதனைகளை ஏற்படுத்துவோம். நமக்காகவும், உலகுக்காகவும் புதிய வரையறைகளை நிர்ணயிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதே தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:.

”கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம். அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதே நமது குறிக்கோள். விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன். விளையாட்டு கட்டமைப்புகளை உலக தரத்திற்கு உயர்த்தி வருகிறோம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் பிரச்சினையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து பயிற்சி கொடுத்தோம்.அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா தொடரில் பங்கேற்கின்றனர் என்பது மகிழ்ச்சி. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ, அதே போல் விளையாட்டு இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு” என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது.

மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பல சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளித்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 76 புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளோம். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது. பொருளாதாரரீதியாக பின்தங்கிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்து வருகிறது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை அளிக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு கூறினார்.

Tags :
Advertisement