மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தாக்குதல் முயற்சி
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். காவலர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்தத் தாக்குதலை தடுத்து நிறுத்தினார்கள்.ஆனாலும் அமைச்சர் முன்னிலையில் தேசியக் கொடியை தீவிரவாதிகள் கிழித்தனர். இதனால்பரபரப்பு ஏற்பட்டது.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை துவக்கியுள்ளன. இந்த சூழலில் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர் இந்த ஆறு நாட்களில், பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன் ஒரு பகுதியாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியை அவரது இல்லத்தில் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இல்லத்தில் வெளியே குவிந்து இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் காரில் ஏறுவதற்காக ஜெய்சங்கர் வெளியே வந்த போதும் வெளியே திரண்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷமிட்டனர். காலிஸ்தான் ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் சென்ற் காரின் முன்னால் பாய்ந்ததோடு அவரை தாக்கவும் முயற்சித்தார். அவரை காவலர்கள் லாவகமாகத் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்தெறிந்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர்களை, அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்றவரை போலீஸார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினர். பிரிட்டன், கனடா நாடுகளில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக அந்நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, லண்டனில் உள்ள சவுதம் ஹவுஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பிர்ச்சினை, ட்ரம்ப் வரிவிதிப்பு, சீன உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஜெய்சங்கர் பேசினார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு ட்ரம்ப் உதவியை நாடி பிரதமர் மோடி தீர்வுகாண முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “காஷ்மீரில், பெரும்பாலானவற்றை நாங்கள் சிறப்பாகச் சரிசெய்துள்ளோம். 370-வது சட்டப் பிரிவை நீக்கியது அதில் முதல் படி. அங்கே வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகள், சமூக நீதியை மீட்டெடுத்தது இரண்டாவது நகர்வு. மிக அதிகப்படியான வாக்குப்பதிவுடன் நடத்தப்பட்ட தேர்தல் மூன்றாவது படியாகும். நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் ‘திருடப்பட்ட’ பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நினைக்கிறேன். அது முடிந்ததும், காஷ்மீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்றார்.
காஷ்மீரில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகளில் சில விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்துவதும், தீர்வு காண்பதும் அவசியமாக இருக்கலாம். ஆனால் உலகளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியா மனித உரிமைகளைப் பேணுவதில் வலுவாக இருக்கிறது” எனவும் ஜெய்சங்கர் பதிலளித்தார்
இதுகுறித்து வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் , “வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ரின் லண்டன் பயணத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்ட வீடியோக்களை நாங்களும் பார்த்தோம். இந்த பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் இதுபோன்ற அத்துமீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கண்டிக்கிறோம். பேச்சுவார்த்தையை நடத்தும் நாடு அதன் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.