'சாவி அரசியல்' - ஒடிசாவில் பா.ஜ.க-வுக்கு கை கொடுக்குமா?
2024 ஜனவர் 22ல் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட பிரதமர் மோடி போட்ட திட்டத்தை போல அதற்கு முன்பாக ஜனவரி 17 ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றியுள்ள நடைபாதை சீரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மோடி & நவீன் பட்நாயக்கின் கணக்குகள் எல்லாம் இந்துக்களின் வாக்குகளை மனதில் வைத்து தான். 4 கட்டங்களாக நடத்தப்படும் ஒடிசா தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று பூரி ஜெகநாதர் கோயிலிருந்து பிரதமர் மோடி தொடங்கி இருக்கிறார்.
கடவுள் ஜெகநாதர், கடவுள் பலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோருக்கு 12 ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள ''ரத்ன பந்தர்' அறையின் சாவி குறித்த பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு,விசாரணை என நகர்ந்து வரும் நிலையில் பாஜக அதை தற்போது தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்து இருக்கிறது. அந்த ரத்ன பந்தரின் டூப்ளிகேட் சாவியை கண்டுபிடித்து விட்டதாக நவீன் பட்நாயக் அரசு கூறினாலும் அந்த டூப்ளிகேட் சாவிகள் ஏன் தயாரிக்கப்பட்டன? இரவில் யாராவது டூப்ளிகேட் சாவிகளை கொண்டு திறக்கிறார்களா? தெய்வங்களின் விலைமதிப்பற்ற நகைகள் திருடப்பட்டதா? என பிரதமர் மோடி பல கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைத்தால் ரத்ன பந்தரின் புனிதத்தை மீட்டெடுக்கும் என மோடி உறுதியளித்துள்ளார். இது குறித்தான விசாரணை அறிக்கை பாஜக ஆட்சிக்கு வந்த 6 நாட்களுக்குள் வெளியிடப்படும்,ஆபரணங்கள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சியில் 20 ஆண்டுகள் நவீன் பட்நாயக் முதல்வராக தொடர்ந்து வரும் நிலையில் இந்த முறை பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.ஜூன் 4 ஆம் தேதி என்ன முடிவுகள் வந்தாலும் அரசியலில் ஆச்சரியத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.