கேரளா- வயநாட்டில் நிலச்சரிவு- பலர் பலி!
தொடரும் கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில், நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் காரணமாக அட்டமலையில் இருந்து முண்டகை வரையில் போக்குவரத்துக்கு இருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மாநில மற்றும் மத்திய மீட்புப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மீட்புப்பணிகளுக்காக கோவை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சுமார், 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சூழலிலும் தற்போது கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குவதால், அங்கு 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையடுத்து, கனமழை எச்சரிக்கை நிலச்சரிவு எதிரொலி காரணமாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.
குறிப்பாக, கேரள மாநிலம் அட்டப்பாடி, அதிரப்பள்ளி, நெல்லியம்பதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடல். மேலும், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அருவிகளுக்கு செல்ல ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை அனுமதி இல்லை. அதைப்போல, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொடர்ந்து தொய்வு நிலவி வருகிறது. இதனிடையே மீட்புப் பணிகளில் உதவி செய்வதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்திருந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் அனைவரும் வயநாடு மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.