கேரளாவில் ஒரு நெஞ்சம் மறப்பதில்லை : இசை நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி. 4 பேர் உயிரிழப்பு
கேரளாவிலுள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் ஆண்டு டெக் ஃபெஸ்ட் தொடர்பாக இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் நிகிதா காந்தியின் இசைநிகழ்ச்சி நேற்று மாலை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவர்கள் சிக்கினர்.இதில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். காயமடைந்தவர்களுக்கு களமசேரி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கொச்சி களமசேரியில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (CUSAT) அமைந்துள்ளது. இந்தக் பல்கலைக்கழகத்தில் டெக் ஃபெஸ்ட் என்ற தொழில்நுட்ப விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நிகழ்ச்சியின் இறுதிநாளான நேற்று இரவு, ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைக் காண மாணவ மாணவியர் குவிந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால், வெளிப்பகுதியில் நின்றிருந்த மாணவ மாணவியர் ஆடிட்டோரியத்துக்குள் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 2 மாணவிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலர் மயக்கமடைந்தனர். அவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``களமசேரி கல்லூரியில் காயமடைந்த 31 பேர், களமசேரி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதில் 2 பேர் ஐ.சி.யு-விலும், ஒருவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடனும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 18 பேர் கில்டன் ஆஸ்பத்திரியிலும், 2 பேர் ஆஸ்டல் மெடிசிட்டியிலும் சிகிச்சையில் உள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள், சிகிச்சை விவரங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய, களமசேரி மெடிக்கல் காலேஜில் விரைவில் உயர்மட்ட மருத்துவக்குழு கூட்டம் நடக்க உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. ``இது நாட்டை உலுக்கிய மிக துயரமான சம்பவம்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், எர்ணாகுளம் மாவட்ட மருத்துவக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தொடர்புகொண்டு காயமடைந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நள்ளிரவு தகவலின்படி வெளியான தகவலின் அடிப்படையில், 64 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்த அதுல் தம்பி, சாரா தாமஸ், ஆன் ரூப்டோ மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த ஆல்வின் ஜோசப் ஆகியோர்தான் இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.