கேரளா:கோயில் திருவிழாவில் பட்டாசு தீ விபத்து!150 படுகாயம்!
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுகான திருவிழா அங்கு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில் இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தகவலறிந்து, தீயணைப்பு துறையினர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளையும், இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறித்தும் விசாரணை செய்தும் வருகின்றனர். மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 8 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்ஹாங்காடு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கேரள மாநில உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 33 பேர் காசர்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , 19 பேர் காஞ்சங்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 12 பேர் அரிமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இதனை காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் உறுதி செய்துள்ளார். அதில் 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் பட்டாசு வெடிக்கும் பகுதிக்கும், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கும் இரண்டு அல்லது மூன்று அடி மட்டுமே இடைவெளி இருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தை அடுத்து கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.