For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கஸ்தூரிபாய் காலமான தினமின்று!

07:17 AM Feb 22, 2025 IST | admin
கஸ்தூரிபாய் காலமான தினமின்று
Advertisement

🔥ஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்.. காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

Advertisement

அப்பதான் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி, சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, அவருக்கும் வைஸ்ராய்க்கும் நடந்த கடிதப்போக்குவரத்து வெற்றி பெறவில்லை. இதனால் காந்தி திட்டமிட்டபடி 1943 பிப்ரவரி 10ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. பிப்ரவரி 16ந்தேதி அவர் நிலை மோசமாகி விட்டதாக, 6 டாக்டர்கள் கொண்ட குழு அறிவித்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, பாராளுமன்றத்தில் பலர் வற்புறுத்தினர்.

Advertisement

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசின் போக்கைக் கண்டித்து, வைஸ்ராயின் நிர்வாக சபையில் இருந்து சர்.எச்.பி. மோடி, சர்.என்.ஆர்.சர்க்கார், எம்.எஸ்.ஆனே ஆகிய மூவரும் ராஜினாமா செய்தனர். பிப்ரவரி 18ந்தேதி பேசும் சக்தியை காந்தி இழந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தனர். காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் அனைத்திந்திய தலைவர்கள் மாநாடு நடந்தது. அதில் ராஜாஜி, தேஜ் பகதூர் சாப்ரூ, ஜெயகர், புலாபாய் தேசாய் உள்பட 20க்கு மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாத்மாவை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் இந்த வேண்டுகோளை வைஸ்ராய் நிராகரித்தார். காந்தியை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். "காந்தியை கைது செய்தது மாபெரும் தவறு. அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று இங்கிலாந்து நாட்டுப் பேரறிஞர் பெர்னாட்ஷா அறிக்கை விடுத்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. காந்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். தமது மனோதிடத்தால், 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மார்ச் 3ந்தேதி வெற்றிகரமாக முடித்தார். தண்ணீர் கலந்த ஆரஞ்சு பழரசத்தை கஸ்தூரி பாய் கொடுக்க, அதை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

அதே சமயம் காவலில் இருந்த கஸ்தூரிபாய்க்கு 1943 டிசம்பர் கடைசியில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உடல் நலிந்து, படுத்த படுக்கையில் வீழ்ந்தார். அவரை விடுதலை செய்யும்படி, லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார். கஸ்தூரிபாயின் உடல் நிலை மோசம் அடைந்தது. மனிதாபிமானத்தை மதித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்க பிரிட்டிஷார் மறுத்ததுடன், "கஸ்தூரிபாய் இப்போது இருக்கும் இடம் அவருக்குப் பாதுகாப்பானது" என்று கூறியது.

1944 பிப்ரவரி மாதத்தில், தன் முடிவு நெருங்கி விட்டதை கஸ்தூரிபாய் உணர்ந்து கொண்டார். தன் பேரன், பேத்திகளைக் காண விரும்பினார். அவருடைய இறுதி விருப்பப்படி பேரன் பேத்திகள், நெருங்கிய உறவினர்கள் ஆகாகான் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1944ம் ஆண்டு இதே பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு, கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம் கஸ்தூரிபாய் காலமானார்.அப்போது அவருக்கு வயது 75.

எதற்கும் கலங்காத காந்தி, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். 62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன் சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின் பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை. கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி, இறுதிச்சடங்குகளை செய்தார்.🙏🏻

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement