கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை !
கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மு. கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளுக்கு கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:–
'ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர் கலைஞர். இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குரளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர். அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் பணியாற்றியவர். அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், கலைஞரின் குடும்பத்தார்கள் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த வகையில் அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்த கலைஞரின் குடும்பத்தார் அனைவருக்கும், தயாளு அம்மாள் குடும்பத்தாருக்கும், அதேபோல, ராஜாத்தி அம்மாள் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்’.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மொத்தம் 179 நூல்கள். பல்வேறு தலைப்புகளில், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், சங்கத்தமிழ் மற்றும் முரசொலியில் தொடர்ந்து உடன்பிறப்பிற்கான கடிதங்கள் இப்படிப்பட்ட அனைத்து படைப்புகளும் இன்றைக்கு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.