For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலை :கார்த்திகை தீபத்திருவிழாக் கொடியேற்றம்!

06:22 PM Dec 04, 2024 IST | admin
திருவண்ணாமலை  கார்த்திகை தீபத்திருவிழாக் கொடியேற்றம்
Advertisement

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

அதைத்தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்கத்தர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். நாளை 5ம்தேதி 2ம்நாள் காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி நடைபெறும்.6ம்தேதி 3ம் நாள் காலை உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 7ம்தேதி 4ம்நாள் உற்சவத்தில், காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். 8ம் தேதி 5ம்நாள் காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி நடைபெறும். 9ம்தேதி 6ம்நாள் காலை உற்சவத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும்.

Advertisement

10ம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்சரதங்களும் பவனி வரும். 11ம்தேதி 8ம்நாள் உற்சவத்தில் காலையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலையில் பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 12ம்தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக 13ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

Tags :
Advertisement