கார்கில் போர் வெற்றி வெள்ளி விழா தினம்!
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 25-வது வெள்ளி விழா ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாய்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவைப் பெரிதும் விரும்பியவர் . அப்படி விரும்பியதோடு நிற்காமல் அதை நடைமுறைப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை தாண்டிய ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன. இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்த வண்ணமே இருந்தது. என்றாலும் வாஜ்பாய் மனம் தளரவில்லை. சகோதர நாடான பாகிஸ்தானுடன் இனியும் சண்டை தொடரக்கூடாது என்று கருதி, லாகூர் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதாவது, டெல்லியிலிருந்து லாகூருக்குப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய். மற்ற தலைவர்களைப்போல கையசைத்துத் தொடங்கி வைத்ததோடு நிற்காமல், அந்தப் பேருந்தில் லாகூருக்கே சென்றார். அப்போதைய பாகிஸ்தான் அதிபருடன் கைகுலுக்கினார். 'தம்முடன் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ' என்னும் விதமாகப் பாகிஸ்தானுடன் நட்புறவு தொடர வேண்டும் என்ற உரையாற்றிவிட்டு நாடு திரும்பினார் அவர். ஆனால், அந்த நிகழ்வு நடந்த மூன்றே மாதங்களில் வாஜ்பாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம்.. உலகளாவிய அளவில் கவனம் பெறப்பட்ட கார்கில் போரைத் தொடங்கி துரோகம் செய்தார்கள். . 1999 ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் எல்லையில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி டைகர் மலை, ரொலோலிங் மலை, பத்ரா டாப் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றினர். அதாவது எலும்பை நொறுக்கும் அளவிலான குளிர் அதிகம் உள்ள சமயங்களில் இருநாட்டின் ராணுவத்தினரும் மலை உச்சியில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து கீழே இறங்கி சமவெளிக்குத் திரும்புவது வாடிக்கை. அதுபோலத்தான், இந்தியப் பாதுகாப்புப் படையினரும் திரும்பினர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரோ, அவர்கள் பகுதிக்குத் திரும்புவதுபோல பாவனைச் செய்துவிட்டு, கீழே இறங்காமல் பதுங்கிக்கொண்டனர். தங்கள் நாட்டு வீரர்களைக் கூடுதலாக அங்கே வரவழைத்தது. கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற நீண்டகாலத் திட்டத்தை, இந்திய எல்லையில் ஆளில்லா நேரம் பார்த்து நிறைவேற்ற எத்தனித்தனர். இந்திய எல்லைக்குள் பதுங்கிப் பதுங்கி, ஊடுருவத் தொடங்கினார்கள். நம்முடைய எல்லையில் சொற்ப இந்திய வீரர்களை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்து வைத்தனர். அவர்களைக் கொடுமை செய்து பின்னர் கொன்றனர். இன்னொருபுறம் நம்முடைய எல்லைப் பகுதிகள் ஒவ்வொன்றாகப் பாகிஸ்தான் படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதையறிந்ததும் பாகிஸ்தானுக்கு பதிலடி தந்து இந்தப் பகுதிகளை மீட்க களத்தில் இறங்கிய இந்திய ராணுவ வீரர்கள் ஆபரேஷன் விஜய் எனும் திட்டத்தை வடிவமைத்து ஆயிரக்கணக்கான வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். போர் என்பது சமவெளிப் பகுதியில் நடைபெற்ற சாதாரணப் போர் அல்ல. கடுங்குளிரில், பனிச் சிகரங்களிலும் மலை முகடுகளிலும் நடைபெற்ற மிகக் கடுமையான ஒரு போர். இந்திய வீரர்கள் பல யுக்திகளைப் பயன்படுத்தி போர் புரிந்தனர். பாகிஸ்தானில் அப்போது உள்நாட்டுக் குழப்பம் நிலவிய சூழலில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கும் இடையே கார்கில் போர் தொடர்பாகக் கருத்து மோதல் உருவானது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமராக இருந்த வாஜ்பாயின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டினர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நம் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிய வைத்தார்.
உலக நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு இரவு பகல் பாராமல் சுமார் மூன்று மாதம் போர் நடந்தது. இந்த போரில் இரு நாடுகளின் தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் வீரமரணத்தை தழுவினர். ஆனாலும் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து கடுமையாக போரிட்டு அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டனர். அதே ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அன்று கார்கிலில் கைப்பற்றப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் போரிட்டு வென்று மீட்டதுடன் பாகிஸ்தான் ராணுவத்தை அடக்கியது.
இந்த வெற்றி இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இன்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமை அடைய வைத்தது. வெற்றிப் பெருமிதத்துடன் போரில் இறந்த வீரர்களின் இழப்புகளும் வேதனைப்படுத்தியது. இந்தப் போரில் தமிழகத்தின் மேஜர் சரவணன் உள்பட 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆகவேதான் மத்திய அரசு போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும் போரில் துணிச்சலுடன் பங்கேற்று வெற்றியைத் தேடித்தந்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் ஜூலை 26 ஆம் தேதியை கார்கில் வெற்றி தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 25 வது வருட கார்கில் வெற்றி தினமான இன்று ராணுவ வீரர்களின் இந்த வீர செயலை நினைவு கூறும் விதமாக நாட்டின் பல பகுதிகளில் ராணுவ நிகழ்வுகள் நடந்து வருகிறது. லடாக் திராஸ் போர் நினைவிடத்த்தை நோக்கி கரம் குவித்து அவர்களை நினைவு கூர்ந்து பெருமை படுத்துவோம்.