For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉காஞ்சி மகா பெரியவா, முக்தி அடைந்த நாள்.🙏

07:31 AM Jan 08, 2024 IST | admin
🦉காஞ்சி மகா பெரியவா   முக்தி அடைந்த நாள் 🙏
Advertisement

ம்.. 1994-ம் வருடம் ஜனவரி 8-ம் தேதி, 'அனைத்து சாலைகளும் காஞ்சியை நோக்கி' என்று சொல்லும்படி காஞ்சியை நோக்கி வாகனங்கள் சாரிசாரியாகச் சென்றன. நகரத்துக்குள் பிரவேசிக்க முடியாதபடி ஜனத்திரள்; வாகன நெரிசல். அன்றைய தினம் போல் என்றைக்குமே முக்கியப் பிரமுகர்கள் ஒருசேர காஞ்சிக்கு வந்ததே இல்லை. மடாதிபதிகளும், ஆன்மிக அறிஞர்களும், பிரதான அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும், பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களும் அன்று மதியம் முதலே காஞ்சியை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், அத்தனைபேர் முகங்களிலும் மகிழ்ச்சிக்கு மாறாக கனத்த சோகமும் அடர்த்தியான மௌனமுமே காணப்பட்டது. அன்றுதான் 'நடமாடும் தெய்வம்', 'பரமாசார்யார்', 'காஞ்சி முனிவர்' என்றெல்லாம் அனைத்துத் தரப்பினராலும் போற்றி வணங்கப் பெற்ற காஞ்சி மகான் மகா சமாதி அடைந்த நாள்.

Advertisement

அன்றைய தின ஸ்ரீபரணிதரன் ஞாபகக் குறிப்பு இதோ:

Advertisement

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார். எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…!

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள்.பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள். எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது. வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே.

இந்த ஆன்மிக உலகத்துக்கே பேரிழப்பு நிகழ்ந்த அந்த நாளில், ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும்கூட அந்த மகானின் மகத்துவத்தைப் பலவாறாகப் போற்றி அஞ்சலி செலுத்தினர்.அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பெற்ற காஞ்சி மகான், தர்மசாஸ்திரங்களின் திரண்ட வடிவமாகவே விளங்கினார்.

தர்ம சாஸ்திரங்களின் திரண்ட வடிவமாக அவர் இருந்த காரணத்தினால்தான், தர்ம சாஸ்திரங்கள் என்றைக்கும் அழியாதிருக்கும்படி ஏகப்பட்ட அருளாடல் நிகழ்த்தியுள்ளார்.

🌻பாவ புண்ணியம் என்பது செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும் நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவக்கணக்கில் தான் சேரும்.

🌻தியானம் செய்வது பிறருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மனதுக்குள் தாயாரைச் சதா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.

🌻தினமும் நாம் பல பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். ’இறைவா, எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை’ என்று வாழ்க்கையில் கரையேறுவதற்கான வழி தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இந்த வார்த்தையைச் சொல்லாதவர்கள், உலகில் எவருமில்லை.

🌻இருட்டில் கிடந்து அல்லாடும்போது ஒரு மெழுகுவத்தி வெளிச்சம் கிடைக்காதா என்கிற ஏக்கம் தான் அது. ஒரு மெழுகுவத்தி வெளிச்சம் கிடைத்ததும் நம்மைச் சுற்றி இருக்கும் இருள் விலகிவிடுகிறது. அப்படியொரு மெழுகுவத்தி வெளிச்சம், நம் எல்லோருக்கும் ஒருதருணத்தில், வாய்க்கும்.

🌻இந்த அறையின் கதவு அங்கேதான் இருக்கிறதா என்று அந்த மெழுகுவத்தி வெளிச்சத்தில் நமது பிரச்சினைகள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றன’’ என பல அருளியிருக்கிறார்.

✍️கிரி வெங்கட்ராமன்

Tags :
Advertisement