தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு தொடங்கியது!

04:26 PM Feb 08, 2024 IST | admin
Advertisement

நாம் முன்னரே குறிப்பிட்டது போல் கலைஞர் தலைமையில் 1999-இல் 'தமிழ்இணையம்99' மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் 'கணித்தமிழ்24' மாநாட்டினை நடத்தவுள்ளது. ஆம்.. இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு துவங்குகிறது. பிப்ரவரி 10ம் தேதி வரை நடைப்பெற உள்ள மாநாட்டில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மைப் பணிகளாகும். 'தமிழ்இணையம் 99' மாநாட்டில் பங்குபெற்ற வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு 'தமிழ்99 விசைப்பலகை' உருவாக்கப்பட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழில் மென்பொருள்களை உருவாக்குவது தொடர்பான செயல்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

'தமிழ்இணையம்99' மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் அபரிமிதமாக வளர்ச்சிபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த உரையாடல் கடந்த நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. எனினும், அண்மைக் காலத்தில் அது முழுவீச்சில் வளர்ச்சி கண்டிருக்கிறது. எனவே, வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பப் பாதையில் தமிழின் பயணம் சிறப்புற நிகழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்னும் நம்பிக்கையுடன் இம்மாநாடு முன்னெடுக்கப்படுகிறது. தமிழும் தொழில்நுட்பமும் இணைந்த இந்தப் பயணத்தைச் செழுமைப்படுத்த புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை அதிக அளவில் பயன்படுத்த இம்மாநாடு உறுதி பூண்டுள்ளது.

Advertisement

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மொழியியல் அறிஞர்களும் கூகுள். மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, AI சிங்கப்பூர், ஸோஹோ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் இம்மாநாட்டில் பங்குகொள்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40 க்கும் மேற்பட்ட அமர்வுகள் & குழு விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.

மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் மாநாட்டில் கலந்துகொள்வோர் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நிரலாக்கப் போட்டியை நடத்தியது.

போட்டியில் கலந்துகொண்டவற்றில் சிறந்த நிரலாக்கங்களை வல்லுநர் குழு தேர்வுசெய்துள்ளது. அதில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் நிரலாக்கங்கள் செயல்முறை விளக்கமாகச் செய்துகாட்டப்பட உள்ளன. மேலும், 7 பயிலரங்குகள் & பயிற்சிப் பட்டறைகளும் இம்மாநாட்டைச் செழுமைப்படுத்த உள்ளன. தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்குமான மிகப் பெரிய களம்.

இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு முன்னோடித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்  நடத்திய 'தமிழ்இணையம் 99' மாநாடு நடைபெற்ற பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாள்களிலேயே பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு (கணித்தமிழ்24) நடைபெறுவதும், அதுவும் கலைஞர் நூற்றாண்டில் நடைபெறவிருப்பதும் சிறப்புக்குரியன. தொழில்நுட்பத் தளத்தில் உலகத் தரத்திற்குத் தமிழை உயர்த்தும் ஒரு முயற்சியான இம்மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு தொடர்பான விவரங்கள் https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
chennaiConferenceKanitamil 24TamilTechnology Tamil
Advertisement
Next Article