தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
கள்ளக்குறிச்சி டிஸ்ட்ரிக்கில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள், திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை, உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “உயர் அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிவிட்டார். ஏழைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. நகரின் மையப்பகுதியில் அரசின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம். கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். 58 மரணங்களுக்கும் பொறுப்பு தமிழக அரசு தான். காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதுபோல மக்களின் உணர்வுகளை தடை செய்ய முடியாது. மக்களுக்கு நீதி கேட்பதில் என்ன தவறு. போராட்டத்தை முடக்க முயன்றாலும், அஞ்ச மாட்டோம். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.,வினர் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கக்கூட இடையூறு செய்தார்கள். தற்காலிக மேடையில் இப்போது நிற்கிறேன். மாவட்ட கலெக்டர் பொய் கூறியதால், கள்ளச்சாராயம் குடித்தவர் பலர் சிகிச்சைக்கு வராமல் உயிரிழந்தனர். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது" என்று காட்டமாக குற்றம் சாட்டினார்