For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய அரசியலின் கலைஞர் வி.பி. சிங் - நினைவுக் குறிப்புகள்!

07:34 AM Nov 27, 2023 IST | admin
இந்திய அரசியலின் கலைஞர் வி பி  சிங்   நினைவுக் குறிப்புகள்
Advertisement

ம் நாட்டின் ஏழாவது  பிரதமராக ஜஸ்ட் 11 மாதங்கள் என்னும் குறுகிய காலமே இருந்தாலும் , மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர், பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தத் துவங்கியவர், இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமாக விளங்கியவர் என வி.பி. சிங் பல வகைகளில் போற்றப்பட்டவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.

Advertisement

வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று.

Advertisement

  • இந்தியாவின் ‘கலைஞர்’ என போற்றத்தக்கவர், வி.பி. சிங்! ஏனெனில், கலைஞரைப் போலவே பெரும்பான்மை சமுதாயங்களின் மனநிலையோடு சமரசம் செய்துகொண்டு போகவேண்டும் என்று நினைக்காமல், கடைசிவரை சமூகநீதிக்காக துடித்த இதயம் அவருடையது!

இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம்.

அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார். எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.அதிலும் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங்கிற்கு முன்பே துவக்கியவர். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984 முதல் 1987வரை நிதியமைச்சராக இருந்தபோது ‘லைசன்ஸ் ராஜ்’ஐ உடைத்து, பொருளாதார சீர்திருத்தங்களைத் துவங்கியவர் வி.பி. சிங்தான்.

பின்னாளில் 1989ல் வி.பி. சிங் பிரதமராக பொறுபேற்றப் போது அமைத்தது ஒரு வித்தியாசமான அமைச்சரவை. 1977ல் ஜனதா கட்சி அமைத்ததை விட வித்தியாசமான அமைச்சரவை! அதாவது, இதில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் கை அதிகமாக ஓங்கியது. அத்வானி ‘ராம் மந்திர் ஜல்தி ஹே….’ என்று ரத யாத்திரை கிளம்பினார். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட வி.பி. சிங்கை அத்வானியின் செய்கை நிறையவே சீண்டியது. அவர், ’ஆட்சியே போனாலும் சரி, அத்வானியை கைது செய்…’ என்று லாலுவுக்கு தகவல் அனுப்பினார். சில நாட்களில் ‘பீகாரில் அத்வானி கைது’ என்று செய்தி வெளியானது. அதைத் தாங்கிப் பறந்த காகிதங்களின் ஈரம் காய்வதற்குள், ‘வி.பி. சிங் ஆட்சி கலைந்தது’ என்ற செய்தியும் உடன்வந்து இணைந்தது! விஸ்வநாத பிரதாப் சிங் எனும் வி.பி. சிங், மதவெறி எனும் அரக்கனை வதம் செய்த வீரனின் புன்னகையுடன் அன்று பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

ஆனால் இன்றைக்கும் வி.பி. சிங் போல இந்திய மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு அரசியல்வாதி வரலாற்றில் இருப்பாரா எனத் தெரியவில்லை. இதற்கு, அவர் மக்கள் பணத்தை பதுக்கி சொத்துசேர்த்தவரோ அல்லது இந்தியாவின் ரகசியங்களை பிறநாட்டுக்கு விட்டுக்கொடுத்தவரோ அல்ல. அப்புறம் ஏன் இந்த வெறுப்பு? வேறு எதற்காகவும் அல்ல, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட) மக்களுக்கு படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கும் மண்டல் அறிக்கையை அவர் சட்டமாக்கினார், என்பதற்காகவே!

‘மண்டல் அறிக்கை நல்லது தானே, அதற்கு ஏன் அவரை வெறுக்கவேண்டும்’ என்ற கேள்வி எழலாம். அங்கே தான் ஒளிந்திருக்கிறது, இந்தியாவின் சாதி ஆதிக்கத்தன்மை! உண்மையில், 1989 ஆகஸ்ட் மாதம், வி.பி. சிங் மண்டல் அறிக்கையை கையில் ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, இந்தியாவின் அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களும் துள்ளி கூத்தாடியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாடெங்கும் அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. ‘இந்தியாவை சாதி அடிப்படையில் பிரிக்கிறார், வி.பி. சிங்’ என்று பெரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘Anti – Mandal Protests’ என்று இப்போதும் இணையத்தில் அவற்றை நீங்கள் பார்க்கலாம். ஆனால், வி.பி. சிங் சாதி அடிப்படையில் இந்தியாவை பிரிக்க பார்த்தாரா? இல்லவே இல்லை. இந்தியா ஏற்கனவே சாதி அடிப்படையில் பிரிந்து தான் இருந்தது. அதில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நியாயமான சட்டத்தை கொண்டுவர அவர் எண்ணினார். அவ்வளவே! எதிர்பாராதவிதமாக, இது எதுவுமே இந்திய மக்களுக்கு புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் கண் கட்டப்பட்டிருந்தது.

மண்டல் அறிக்கையை சட்டமாக்கியதற்கு பின்னர், வி.பி. சிங்கின் வாழ்க்கையில் எல்லாமே மாறியது. அவரது பிரதமர் பதவி பறிபோனது. அவரது அரசியல் நண்பர்கள் அவரை விட்டு விலகினார்கள். கட்சி, அமைப்பு, நாடு என எல்லாமே அவரை கைவிட்டது. 1969 முதல் 1989வரை பெரும் ஒளியோடு ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, ஒரு நல்ல சட்டத்தை நிறைவேற்றியதற்காக, சொந்த நாட்டு மக்களாலேயே அகதியாக மாற்றப்பட்டார். ஆம்! 2008 நவம்பரில் இதே 27 இல் இறக்கும்வரை, வி.பி. சிங்கால் மீண்டும் அரசியல் அரங்கிற்குள் அடியெடுத்துவைக்கவே முடியவில்லை. அரசியல் ஒரு மாயச்சுழி என்பார்கள். ஆனால், வி.பி. சிங்குக்கு மட்டும் அது மரணச்சுழியாகவும் இருந்தது! ஆனாலும், அதைப்பற்றி வி.பி. சிங் எங்கும் பெரிதாய் வருத்தத்தை காட்டவில்லை. ’என் கால்கள் உடைக்கப்பட்டாலும், நான் கோல் அடித்தேன் அல்லவா…’ என்று, குழந்தை சிரிப்புடன் அவர் வாழ்ந்து, மறைந்தார்!.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement