For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கச்சத்தீவு விவகாரம்: ஜெயலலிதாவுக்கு அன்று சொன்னது தான் இன்று மோடிக்கும்!

08:04 PM Apr 02, 2024 IST | admin
கச்சத்தீவு விவகாரம்  ஜெயலலிதாவுக்கு அன்று சொன்னது தான் இன்று மோடிக்கும்
Advertisement

ச்சத்தீவு என்பது தமிழக அரசியல் களத்தில் புதிய கோஷமோ அல்லது புதிய சர்ச்சையோ அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதிமுகவும் கச்சத்தீவை மீட்போம் என பல தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளன. நாடாளுமன்றத்திலும் 1960களிலும் சரி, தற்போதும் சரி, இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளாக நிலவி வரும் இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக என கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

Advertisement

அரசியல் களத்தில் பேசப்படும் அளவு பெரிதாக இருக்கும் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள் தான், நீளம் 1.6 கி.மீ ஆகும். இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியில் கச்சத்தீவு உள்ளது. அதாவது, இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. மனிதர்கள் யாரும் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் விழாவில் இரு நாட்டை சேர்ந்த மக்களும் பங்கேற்பார்கள். இந்த தீவுக்கான உரிமை சர்ச்சைதான் இப்போதும் உருவாகி உள்ளது..! இப்போது போல் வரலாற்றை அடிக்கடி திரிப்பது என்பது பாஜகவுக்கு கைவந்த கலை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பப்படும் போதெல்லாம் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கம் இதோ… இது முன்னொரு சமயம் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலாக 2016 இல் தலைவர் வெளியிட்ட அறிக்கை இதோ…!

Advertisement

“கச்சத் தீவு” பற்றி தமிழகச் சட்டப் பேரவையில் நேற்றைய தினம் (20-6-2016) அன்று பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத் தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். துhங்குபவர்களை எழுப்ப முடியும், துhங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் “கச்சத்தீவு” பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன்.

உதாரணமாக, 22-3-2009 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் “கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர் தான் தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்” என்றார். உடனடியாக நான், “கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால் - எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?” என்று எனது அறிக்கையில் கேட்டேன்.

15-8-1991 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிய போது ஆற்றிய உரைக்கு அனைத்து ஏடுகளும் கொடுத்த தலைப்பே, “கச்சத் தீவை மீட்க ஜெயலலிதா சபதம்” என்பது தான். “கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது. இது எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். இந்த மண்ணின் ஒரு பகுதியை திரும்ப மீட்கும் சூளுரையாக இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று 1991ஆம் ஆண்டு முழங்கிய ஜெயலலிதா 1991 முதல் 1996 வரையிலும் - பிறகு 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், 2011 முதல் இதுவரையில் பதினைந்து ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போது கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை. 1991ஆம் ஆண்டு அவர் செய்த சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன கிழித்தார்? இதைத் தான் பேரவையில் நேற்று கழக உறுப்பினர் தம்பி பொன்முடி கேட்டிருக்கிறார். உடனே முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நின்று, கச்சத் தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாகச் சொன்னாராம்!

தனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா பதினைந்து ஆண்டுக் காலம் ஆட்சியிலே இருந்த போது - கச்சத் தீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற உண்மையிலேயே அதில் உறுதியாக இருந்தால் அ.தி.மு.க. ஆட்சி ராஜினாமா செய்யும் என்று எப்போதாவது அறிவித்தது உண்டா? விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்து கொண்டு வாய் சவடாலாக முழங்கி விட்டு - அந்தப் பேச்சு ஏடுகளில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்ததே தவிர - வேறு என்ன செய்தார்? உச்ச நீதி மன்றத்திலே வழக்கைப் போட்டு விட்டு, என் கடமை முடிந்து விட்டது என்று இருந்தாரே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதி விட்டு, பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டு கோள் விடுத்ததோடு சரி. ஆனால் நான் ஏதோ ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக தற்போது எப்படியோ தப்பித் தவறி கரையேறி விட்டோம் என்ற இறுமாப்பில் வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

முதலில், மத்திய அரசால் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?

1974ஆம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் “கச்சத் தீவு” பற்றி நான் முன் மொழிந்த தீர்மானம் இதோ:

“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது”

எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வில்லை. மேலும் அந்தத் தீர்மானத்தில் நான் பேசும்போது,

“கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப் பட்டிருக்கிறது” .............

“கச்சத் தீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதில் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்தக் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதற்கு எந்தவகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

தமிழக அரசை இது போன்ற பெரிய பிரச்சினைகளில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை; ஆக்க பூர்வமான முறையில் பிரதமர் - முதல் அமைச்சர் இது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லி யிருக்கிறோம்.

அனைத்துக் கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட - எத்தனை முறை இது பற்றி பிரதமரிடத்தில் தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்சத் தீவுப் பிரச்சினையில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை - கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டி யிருக்கிறேன்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று கோட்டையிலே கூடி எடுத்த முடிவினை உடனடியாக நான் தலைமை அமைச்சருக்கு எழுதியிருக்கிறேன். அது, வருமாறு :-

Dear Prime Minister,

On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri-Lanka agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India.

May I express the hope that you will take into consideration the unanimous decision contained in the Resolution and take appropriate action?

(அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,

கச்சத் தீவின் மீது இலங்கை கொண்டாடி வரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இரு நாடுகளுக்குமிடையே சமீபத்தில் செய்யப் பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.)

மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில்,

“1974ஆம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்க வில்லை. 27ம்தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப் பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்.”

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு. கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.

பின்னர் ஒரு முறை செய்தியாளர்கள் “கச்சத் தீவு” பற்றி என்னைக் கேட்ட போது கூட, கச்சத் தீவை விட்டுக் கொடுக்கும்போது, தமிழ்நாடு தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தார். அவர்கள் சமாதானம் செய்து - கச்சத் தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் - தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன. ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976இல் நம்முடைய ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சி தான் இருந்தது. ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது. அதை நாமும் பல முறை அந்த விதிமுறைகளை யெல்லாம் கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது அதற்குரிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறேன். இதெல்லாம் கச்சத் தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான அடையாளங்களா?

17-8-1991 அன்றே “தினமணி” நாளேடு எழுதிய தலையங்கத்தில், “1974இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திருமதி பண்டார நாயகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை” என்று அப்போதே தினமணி எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், “1976இல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத் தீவின் அருகில் மீன் பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது” என்று எழுதப்பட்டிருந்தது.

உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் “டெசோ” கூட்டத்தில் நான் பேசியது பற்றியும் நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார்.

“கச்சத்தீவு” பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் “கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது.” என்றெல்லாம் தெரிவித்தது.

பேரவையில் பேசும்போது, “1974இல் கலைஞர் கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார்; ஆனால் 2013இல், ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித் தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன வேறுபாடு?” என்று கேட்டுள்ளார்.

15-4-2003 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

“கச்சத் தீவு” பற்றி 15-4-2003 அன்று நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், “டெசோ” அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக் கிறேன். உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்பிட உத்தரவிட்டனர்.

1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போதே நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு. கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார். “இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக் களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.

20-4-1992 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, “கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று கூறினாரா? இல்லையா?

இன்னும் சொல்லப்போனால், 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “The Ceding of this tiny Island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral relations” அதாவது “தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தது உண்டா இல்லையா?

மீண்டும் 23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பிரதமர் வாஜ்பய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணப்படவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும் எழுதும்போது, “The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theeve could be upheld at the same time” அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா.

மீண்டும் ஒரு முறை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “கச்சத் தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத் தீவு மீட்கப்பட்டிருக்கும்” என்றார். அதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டுத் தான் இப்போது கச்சத் தீவை நான் தான் தாரை வார்த்தேன் என்று பேரவையில் பேசுகிறார்.

கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும்; “கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது. எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது!

ஜெயலலிதாவுக்கு அன்று சொன்னது தான் இன்று மோடிக்கும்…!

ராஜீவ் காந்தி

Tags :
Advertisement