காதல் என்பது பொதுவுடமை- விமர்சனம்!
உள்ளங்கை போனில் அடங்கி விட்ட இவ்வுலகில் நிகழும் சமூக மாற்றங்களுக்கிடையே அதிகரித்து வரும் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், தன்பாலின ஈர்ப்பு குறித்தும் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதோ உண்மைதான். இது போன்ற லெஸ்பியன் உறவு இயல்பு என்பதை எல்லோரா, கஜீராகோ சிற்பங்கள் உணர்த்துகிறது. ஆண்களுக்கு இடையேயான ஹோமோ, பெண்களுக்கிடையே உள்ள லெஸ்பியன் உறவுகள் தொடர்பான கலாச்சாரம் இன்றளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்றொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இவர்கள் திருமணம் செய்து வாழ சில நாடுகள் அங்கீகாரம் அளிக்கிறது. இவர்கள் திருமணத்திற்கு பின்னர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் விரும்புகிறார்கள். மேலும் இயல்பான ஆண் - பெண் தாம்பத்தியத்தில் ஆணின் ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுகிறது. பெண்ணை தனது இன்பத்திற்காக தயார்படுத்தி, தனது இன்பத்தை அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான். தனது துணை எங்கு இன்பம் அடைகிறாள்? எவையெல்லாம் அவளுக்கு பிடிக்கும்? என்று கேட்பதும் இல்லை, சொல்வதும் இல்லை. இது ஆண் - பெண் உறவில் விரிசலை பின்னாளில் ஏற்படுத்துகிறது. அதே சமயம் பெண்ணும் - பெண்ணும் காம உணர்வை எட்டும் போது, பெண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது என்றும், இருவரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை தயக்கமின்றி கேட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தாம்பத்தியம் மேற்கொள்வதால், இருவருக்கும் அதிகளவு இன்பம் கிடைக்கிறது. இதனால் லெஸ்பியன் உறவுகளில் அதிகளவு இன்பம் பெண்ணுக்கு கிடைக்கிறது என்கிறார்கள். ஆனால் மரபு மற்றும் கலாச்சார வாழ்வியலில் உள்ள இந்தியாவில் இது போன்ற உறவை குடும்பத்தினர் விரும்புவதில்லை. இச்சூழலில் இப்படியான இத்தகைய போக்கு இயல்பானதே என்றும் அப்படி விரும்புவோரை அவர்கள் வழியில் பயணிக்க விட்டு விட வேண்டும் என்று உரக்கச் சொல்லும் படமே 'காதல் என்பது பொதுவுடமை படம்!.
கதை என்னவென்றால் வினித் & ரோகினியின் செல்ல மகள் லிஜோமோல் ஜோஸ் . ஒரு கட்டத்தில் தன் அம்மா ரோகிணியிடம் தான் ஒருவரை லவ செய்வதாகவும், அவரையே மேரேஜ் செய்ய ஆசை என்றும் சொல்கிறார். ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் கொண்ட யூ ட்யூபராகவும்முற்போக்கு சிந்தனையும் கொண்ட ரோகிணி மகளின் காதலுக்கு மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவிப்பதோடு, காதலனை வீட்டுக்கு அழைத்து வா, என்று கூறுகிறார். அம்மாவின் விருப்பப்படி லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார். அவரை பார்த்ததும் அம்மா ரோகிணி அதிர்ச்சியில் உரைந்துப் போகிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது ஒரு ஆண் அல்ல, அவரைப் போன்ற ஒரு பெண். இதனால் குடும்பத்தில் பெரும் பிரளயமும் சண்டையும் வெடிக்கிறது. ஆனாலும் நாயகி லிஜோமோல் ஜோஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் பாலினச் சேர்க்கை உணர்வை தனது தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்கிறார் என்பதை ஏகப்பட்ட விளக்கங்கள் மற்றும் விவாதங்களுடன் வியாக்கியானங்கள் மூலம் சொல்லி இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்வதே இந்த ‘காதல் என்பது பொதுவுடமை’.
மெயின் நாயகிகளாக சாம், நந்தினி என்ற கதாபாத்திரங்களாக நடிகைகள் லிஜோமோல் ஜோஸ், அனுஷா ஆகியோர் வாழ்ந்திருக்கிறார்கள்.அதிலும் லிஜோமோல் ஜோஸ், சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆணுக்கு பெண் மீது வருவது போல் தான் தனது காதலும், என்று தனது பெற்றோரிடம் வாதிடுவதும், சிறிது நேர இடைவெளி கிடைத்தாலும், தனது காதல் துணையை அரவணைத்து அன்பு செலுத்துவதும், என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். நடிகை ரோகினி சாமிற்கு அம்மாவாக யூ ட்யூப்பில் முற்போக்கு சிந்தனைகளை பகிர்ந்து பிரபலமானவராக இருந்தாலும், தன் ஃபேமிலியில் இப்படியா? என்று ஷாக் ஆகி தன் மகளின் உணர்வை புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறும் ரோலின் கனமறிந்து ஸ்கோர் செய்கிறார். மனைவி ரோகினி மற்றும் மகள் லிஜோமோலை பிரிந்து சின்ன வீட்டில் செட்டில் ஆகி விட்ட குடும்பத் தலைவன் ரோலில் வரும் வினித் நவீன விசு பாணியில் எடக்கு மடக்காக கேள்விகள் கேட்டு சில பல சமாச்சாரங்களைச் சொல்லி மகள் மனதை மாற்ற முயலும் செயலை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.பெண்ணும் பெண்ணும் காதலித்து ஒன்றாக வாழ்வதென்பது இயற்கைக்கு விரோதமான போக்கு, அப்படி எல்லா பெண்களும் நினைத்தால் உலகில் குழந்தை பிறப்பே இல்லாமல் ஆகிவிடுமே என்று வினித் கேட்கும்போது அதற்கு லிஜோ அளிக்கும் பதில் சரியாக இருந்தாலும் மனம் ஏற்காததென்னவோ நிஜம்.
வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக மெரி என்ற கதாபாத்திரமான தீபா சங்கர் மூலம் ஏகப்பட்ட பர்சனல் விஷயங்களை வெள்ளத்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களையும் காம்ப்ரமைஸ் செய்வதில் ஜெயித்து விடுகிறார் டைரக்டர். அதே சமயம் இப்படி தடம் மாறி போகும் உறவுச் சிக்கல் சமாச்சாரம் வெளியே கசிந்து விடக்கூடாது என்று ரோகிணி இனாமாகத் தரும் 500 ரூ பணத்தைத் திருப்பிக் கொடுத்து சபாஷ் வாங்கி விடுகிறார்.
கேமராமேன் ஸ்ரீசரவணன், மியூசிக் டைரக்டர் கண்ணன் நாராயணன், எடிட்டர் டேனி சார்லஸூன் பங்களிப்பு நிறைவு.
படத்தில் ஒரு சீனைக் கூட முகம் சுளிக்கவைக்காமல், ஆர்வமாக பார்க்க வைக்கும் வசனங்களுக்காக மெனக்கெட்டிருப்பதே படத்தின் பக்கபலம் என்று கூறலாம். ஆனாலும் சராசரியான வாழ்வியலை விரும்புவோருக்கு பிடிக்காத ஒரு சப்ஜெக்டை விசுவின் சம்சாரம் அது மின்சாரம் பாணியில் இது போன்ற தன் பாலின ஆர்வலர்களை அவர்கள் போக்கிலேயே விடுவதே சிறப்பு என்ற ஒரு தீர்வுடன் கதையை முடித்திருப்பதுதான் ஒட்டவில்லை.
ஆனாலும் தனியுடமையாக இன்றும் உள்ள பாலின் உறவை முன்னிலைப்படுத்தி வந்துள்ள இந்த தமிழ் படம் சில பலரை கவரும் என்பது மட்டும் நிச்சயம்.
மார்க் 3./5