கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க!
அதுல் சுபாஷ் என்பவர் மணமுறிவு வழக்கின் போது தன் மனைவியின் தொந்தரவு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட செய்தி வைரல் ஆகி இருக்கிறது. பல ஆண்களும் இதனை முன்னெடுத்து பெண்களுக்கு எதிரான வனமத்தைக் கக்கி வருகிறார்கள். ஜீவனாம்சம் எனும் விஷயத்தை கடுமையாக விமர்சனமும் கேலி கிண்டலும் செய்து பதிவுகள் பார்க்கிறேன். அந்த செய்தி வந்த அன்று எக்ஸ் தளமே குலுங்கியது.அதுல் தற்கொலை மட்டுமல்ல, வேறு எந்தத் தற்கொலையுமே வருந்தத்தக்கதுதான். ஆனால் இதன் மூலம் பெண்கள் எல்லாமே குரூரக்காரர்கள் என்று பிம்பம் கட்டமைக்கப்பட வசதியாக ஆகி விட்டது. இவர் திருமணத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது. அந்தப் பெண் ஏன் பெரும் பணம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார் என்பதும் தெரியாது. அது தெரியாமலேயே பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது. மணமுறிவுக்குப் பின் மனைவி ஜீவனாம்சம் கேட்பது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறதுதானே? இந்தத் தரவுகளைப் பாருங்கள்:
இந்தியாவில் 90 சதவிகிதம் திருமணங்கள் பெண்ணின் தந்தையின் செலவில்தான் நடத்தப்படுகின்றன. திருமணங்களுக்கு ஆண்டுதோறும் இந்தியக் குடும்பங்கள் சுமார் 10 லட்சம் கோடி செலவிடுகின்றன. சராசரியாக ஒரு குடும்பம் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவிடுகிறது. [1] பெரும்பாலான தந்தையர்கள் தன் வாழ்நாள் சேமிப்பு ஏறக்குறைய காலியாகும் நிலைக்குப் போகிறார்கள். பலர் வாழ்நாள் கடனாளியாகவும் ஆகின்றனர். இவற்றின் காரணமாக பலர் பெண்ணின் படிப்புக்கும் திருமணத்துக்கும் சேர்த்து செலவிடுவது கஷ்டம் என்று கருதி பெண்ணின் படிப்பைப் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். ஏனெனில் இங்கே கல்விக்கான செலவைத் தவிர்க்க இயலும். ஆனால் திருமணத்துக்கான செலவைத் தவிர்க்க இயலாது அல்லவா?இந்தியக் குடும்பங்கள் பிள்ளைகள் கல்விக்கு செலவிடுவது போல இரண்டு மடங்கு பணத்தை பிள்ளைகளின் திருமணத்துக்கு செலவிடுகின்றனர்.
திருமணச் செலவு போதாது என்று நகை நட்டுகள், சீர் செனத்தி, கார், ஸ்கூட்டர் முதல் பீரோ, ஃபிரிட்ஜ், கட்டில் என்று வாங்கிக் கொடுக்க நேருகிறது. பாதிக்கும் மேற்பட்ட சமூகங்களில் கையில் ரொக்கமாக வரதட்சிணையும் கேட்கப்படுகிறது. பல நேரங்களில் வட மாநிலங்களில் நிறைய ஊர்களில் மாப்பிள்ளை அழைப்பு நடந்து மணமகனை வெளியேயே நிற்க வைத்து, மண்டபத்துக்கு உள்ளே புதிய பேரங்கள் துவக்கப்படுகின்றன. பேரம் படிந்தால்தான் மணமகன் தலையில் தலைப்பாகை ஏறி உள்ளே வருவான் எனும் பிளாக்மெயில்கள் நடக்கின்றன. திருமணம் ஆன பின்னரும் இந்த செலவு நிற்பதில்லை. தலைப் பொங்கல், தலை தீபாவளி, கார்த்திகை தீபம் துவங்கி பேரன் பேத்திகளுக்கு சீர் என்று ஒரு என்ட் கார்டே இல்லாமல் இந்த செலவினம் தொடருகிறது.இப்படி எல்லாம் செய்து விட்டு, பெண்களைப் படிக்க விடாமல், அவர்களை கேரியர்-சார்ந்து இயங்கவும் விடாமல், அவர்கள் குடும்பத்தின் மீது அதீத நிதிச் சுமையையும் போட்டு அழுத்தி விட்டு, ஏதோ ஒரு பெண் அதிக ஜீவனாம்சம் கேட்டு விட்டாள் என்பதற்காக அறச்சீற்றமும் கொள்கிறோம்! இந்திய ஆண்களின் வெட்கம் கெட்டத்தனம் ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.
அதெல்லாம் சரிதான், ஆனால் தற்கொலைக்குத் தூண்டுவது தவறு என்றுதானே சொல்கிறீர்கள்? ஆமாம். தவறுதான். ஆனால் அதுல் சுபாஷ்கள் அரிதினும் அரிதான கேசுகள். மாறாக, மனைவிகள் தற்கொலை ஆயிரங்களில் இருக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் கழக அறிக்கையின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன:
2020: 4,06,834
2021: 4,71,692
2022: 4,94,011
Crime Against Women எனும் செக்சனில் இந்தக் குற்றங்களின் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சாம்பிளுக்கு சில:
- மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல்: 5,538
- (கொலை வரை போகாத) கணவனின் குரூர வன்முறை: 1,60,506
- வரதட்சிணை சார்ந்த கொலைகள்: 6,897
- அதீத வரதட்சிணை கேட்டு மிரட்டியது: 14,864
- பெண்ணைக் கடத்தி திருமணத்துக்கு வற்புறுத்துதல்: 89,135
இது மட்டுமல்ல. வன்புணர்வு செய்து கொலை செய்தல், வெறும் வன்புணர்வு (!) செய்தல், அமிலம் வீசுதல், கடத்திக் கொண்டு போய் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்துதல், வன்புணர்வு வரை போகாமல் ஆனால் பாலியல் ரீதியில் துன்புறுத்துதல் என்று பட்டியல் நீளமாகப் போகிறது. சமீபத்திய அறிக்கையில் 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்' எனும் செக்சன் 102 பக்கங்கள் இருக்கிறது. [3] சோகம் என்னவெனில், ஆண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று ஒரு பக்கம் கூட இல்லை!எனவே அதுல் சுபாஷ் மரணத்துக்கு வருத்தப்படுவதுடன் நிறுத்திக் கொள்ளுதல் நலம். அதை வைத்து பிலாக்கணம் பாடுவதும், 'ஏ பெண்ணினமே!' எனும் அறச்சீற்றங்களும் வேண்டாம் பிளீஸ்.பெண்களுக்கு எதிரான ஆண்களின், ஆண் குடும்பங்களின் வன்முறைகள் என்பவை பாம்பு மனிதனைக் கடிப்பது போல. தினம் தினம் நடந்து கொண்டிருக்கும் விஷயம் என்பதால் யாரும் செய்தியாக்குவது இல்லை. ஆனால் ஆண்களுக்கு எதிரான பெண்களின், பெண் குடும்பங்களின் வன்முறை என்பது மனிதன் பாம்பைக் கடிப்பது போல. அது ஆச்சரியமான விஷயம் என்பதால் செய்தியாகிறது.எனவே, கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க.