வந்தே பாரத் போலவே வந்தே சதர்ன் ரயில் வரப் போகுது!
மத்திய அரசு நாடு முழுவதும் முழுக்க முழுக்க ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களைப் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வரை 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேசமயம், கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால், சாமானிய மக்களால் பயணிக்க முடியவில்லை. ஆகவே, வந்தே பாரத் ரயில்களுக்கு இணையாக சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில், ஏ.சி. வசதி இல்லாத வந்தே சதர்ன் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
முன்பதிவு இல்லாத 8 பெட்டிகளுடன் மொத்தம் 22 பெட்டகள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும். இந்த வந்தே சதர்ன் இரயிலின் முதல் ரயிலுக்கான பெட்டிகள் சென்னை ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சதர்ன் ரயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் வந்தே சதர்ன் ரயில்கள் இயக்கப்படும் வகையில் தயாரிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
இந்த வந்தே சதர்ன் ரயிலில் சுமார் 1,800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சதர்ன் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. இதன் உட்புறம் தற்போதைய ரயில்களின் பொதுப்பெட்டிகள் போன்றே வடிவமைக்கப்படுகிறது.
அதேசமயம், மின் விசிறிகள், ஸ்விட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் இருக்கும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இடம்பெறும். இந்த ரயில் வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லும். 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும். இந்த ரயில் தயாரிக்கப்படுவதை ரயில்வே அதிகாரிகள் ஐ.சி.எஃப். ஆலையில் பார்வையிட்டனர்.