For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அறுவை சிகிச்சையின் தந்தை ஜோசப் லிஸ்டர்!

07:35 AM Feb 10, 2025 IST | admin
அறுவை சிகிச்சையின் தந்தை ஜோசப் லிஸ்டர்
Advertisement

ருத்துவ உலகிலேயே முதன் முதலாக ‘ஆர்டர் ஆஃப் தி மெரிட்’ விருது வாங்கியவரிவர். மேலும் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டி தலைவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அறுவை சிகிச்சையின் முன்னோடி, அறுவை சிகிச்சையின் தந்தை என இன்றளவும் போற்றப்படுபவர் ஜோசப் லிஸ்டர் நினைவு தினமின்று!

Advertisement

பொதுவாக "மரண பயம்" என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். ஆனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட மரண பயம் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

Advertisement

அந்தக் காலகட்டத்தில் சாதரண அறுவை சிகிச்சை தேவைப் பட்டவர்கள்கூட "உயில் எழுதி வைத்து விட்டுதான் சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு இறந்து விடுவோம் என்ற மரண பயம்" அனைவரையும் வதைத்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரில் 50 விழுக்காட்டினர் ஒரு சில நாட்களில் இறந்து விடுவது சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. அவர்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளில் 'செப்ட்டிக் பாய்சனிங்' என்ற விஷம் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்தது என்பது இப்போது நமக்கு தெரியும் உண்மை. ஆனால் அப்போது அதனை அறிந்து கொள்ளாத மருத்துவ உலகம் என்ன செய்வதென்று அறியாது திகைத்தது. பல மருத்துவர்கள் வேறு வழியில்லை என்று சொல்லி சிகிச்சைகளை தொடர்ந்தனர்.

ஆனால் ஒரு மருத்துவர் மட்டும் அந்த மரணங்களை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்று விரும்பினார். தடுக்க முடியும் என்று நம்பினார். அந்த தனி ஒரு மனிதனின் வைராக்கியமும், விடாமுயற்சியும், மனித உயிர்களை காப்பதுதான் மருத்துவர்களின் கடமை என்ற திடமான நம்பிக்கையும் தான் அவருக்கு 'நவீன அறுவை சிகிச்சையின் தந்தை' என்ற பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த வரலாற்று நாயகரின் பெயர்தான் ஜோசப் லிஸ்டர்.

மருத்துவ படிப்பை முடித்ததும் தான் விரும்பிய அறுவை சிகிச்சைத் துறையிலேயே சிறப்புத் தேர்ச்சி பெற்றார் லிஸ்டர். அப்போது புகழ் பெற்றிருந்த ஜேம்ஸ் சிமி (James Syme) என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னாளில் அவரது மகள் ஏக்னஸையே திருமணம் செய்து கொண்டார். மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவரது போராட்டத்தில் மிகப்பெரிய பலமாக இருந்தவர் அவரது மனைவி ஏக்னஸ். 30 வயதானபோது கிளாஸ்கோ மருத்துவமணையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அறுவை சிகிச்சை நோயாளிகளின் மரண விகிதத்தை எப்படி குறைப்பது என்பதே அவருடைய அன்றாட சிந்தனையாக இருந்தது. தான் அறுவை சிகிச்சை செய்த ஒரு நோயாளி இறந்து போனால் அது தன்னுடைய தோல்வி என்று கருதினார்.

1865ஆம் ஆண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு லிஸ்டருக்கு கிடைத்தது. பொருட்களை புளிக்கச் செய்யும் உயிருள்ள கிருமிகள் காற்றில் இருக்கின்றன என்றும், அந்தக் கிருமிகளால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்றும் பாஸ்டர் கூறியிருந்தார். அப்படியென்றால் பொருட்களை அழுகச் செய்யும் கிருமிகளை அழிப்பதற்கான விஷ முறிவு மருந்தை அதாவது ஆண்டி-செப்ட்டிக் (Antiseptic) மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று உணர்ந்தார் லிஸ்டர். அப்போதிலிருந்து விஷ முறிவு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கடுமையாக் ஈடுபட்டார். அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும் கார்பானிக் அமிலம் கலந்த கிரியோஸோட் (creosote) என்ற ஒரு திரவத்தை வாங்கினார். அந்த திரவத்தை ஒரு நோயாளி மீது பயன்படுத்திப் பார்த்தார். அந்த நோயாளி இறந்து போகவே மனமுடைந்து போனார் லிஸ்டர்.

ஆனால் அவரது மனைவி ஏக்னஸ் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஊக்கமூட்டினார். தோல்வியடைந்த ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் அதே மருந்தை பயன்படுத்திப் பார்க்க விரும்பினார். கால் எலும்பு முறிந்த ஒரு பதினொரு வயது பையன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். கணவனை இழந்த தன் தாய்க்கும், மற்ற தனது சகோதரர்களுக்கும் நான் தான் சோறு போட வேண்டும் என்பதால் தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு லிஸ்டரிடம் முறையிட்டான் அந்தப் பையன். கார்பாலிக் அமிலத்தில் நனைத்த துணியைக் கொண்டு காயத்தில் கட்டுப்போட்டார் லிஸ்டர். நான்காவது நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது அவர் வியந்து போனார். காயம் சீழ்பிடிக்க வில்லை. மாறாக குணமடையத் தொடங்கியிருந்தது. மகிழ்ந்து போனார் லிஸ்டர்.

ரணங்கள் அழுகி விஷமடைவதை தடுக்க முடியும் என்று அவர் நிருபித்துக் காட்டியதை ஏனோ மருத்துவ உலகம் அப்போது ஆர்வமின்றி வரவேற்றது. ஆனால் பாராட்டையெல்லாம் எதிர்பார்க்காத அவர் நோயாளிகளின் உயிரைக் காக்க தன் ஆராய்ச்சிகளையும், மருத்துவமணையில் மாற்றங்களையும் தொடர்ந்தார். அறுவை சிகிச்சை அறையிலும், வார்டிலும் கார்பானிக் அமிலத்தைப் பயன்படுத்திக் காற்றை தூய்மைப்படுத்தினர். மருத்துவ கருவிகள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மருத்துவமணையில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த வார்டில் மரண விகிதம் குறையத் தொடங்கியது. அப்போதுகூட மருத்துவ உலகம் அவரை பாராட்டாமல் கேலி செய்தது. ஆனால் அவரால் உயிர் பிழைத்தவர்கள் அவரை தெய்வமாக போற்றினர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் (King's College London) பேராசிரியராக சேர்ந்தார் லிஸ்டர். அங்கும் மாணவர்கள் அவரை கேலி செய்தனர். அவரை பார்க்கும் போதெல்லாம் கிருமி வருகிறது என்று நகைத்தனர். மருத்துவ சஞ்சிகைகள் சிலர் அவரை 'பொய்யர்' என்றனர். ஆனால் சாதனையாளர்கள் மனம் தளர்ந்ததாக வரலாறு இல்லையே. 1877ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய அப்போதைய புகழ்பெற்ற மருத்துவர் ஜான் ஹண்டர் (John Hunter) மறுத்து விட்டார். லிஸ்டரின் மருத்துவ முறைகளை கேலி செய்தவர்களில் அவரும் ஒருவர். அவர் செய்ய மறுத்த அறுவை சிகிச்சையை தான் செய்வதாக கூறி வெற்றிகரமாக அதனை செய்தும் காட்டினார் லிஸ்டர். அதிலிருந்து மனம் மாறினார் ஜான் ஹண்டர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த இரு மருத்துவர்களும் இணைந்து பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவரது சிகிச்சை முறையை உலகம் ஏற்றுக்கொண்ட பிறகு முப்பது ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார் லிஸ்டர். மருத்துவ உலகிலயே அவருக்குதான் 'ஆர்டர் ஆஃப் த மெரிட்' (Order of Merit) என்ற பட்டம் முதன் முதலாக வழங்கப்பட்டது. உலக நோயாளிகளுக்கு மரண பயத்தைப் போக்கிய ஜோசப் லிஸ்டர் 1912ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் தனது 84ஆவது வயதில் காலமானார். மிகுந்த மதப்பற்று கொண்டிருந்த லிஸ்டருக்கு சமூக வெற்றியோ பணம் சம்பாதிப்பதோ ஒரு பொருட்டாக இல்லை. மனிதகுலம் மேன்மை பெற வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

அடுத்த முறை உங்களில் யாராவது அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் ஜோசப் லிஸ்டருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement