JioCinema-வை Disney+ Hotstar தளத்துடன் இணைக்க முடிவு!
தற்போதைய டிஜிட்டல் உலகில் எண்ணற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்கள் சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 67 ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சோனி LIV, ZEE5, Lionsgate Play மற்றும் அதிகம் பிரபலமில்லாத ஸ்ட்ரீமிங் தள சேவைகளை ஒரு சேர வழங்கி வருகிறது ஓடிடி பிளே. மேற்கூறிய ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியே சந்தா கட்டணம் செலுத்துவதை காட்டிலும் சுமார் 12 மடங்கு இதன் சந்தா கட்டணம் மலிவு எனவும் சொல்லப்படுகிறது இந்நிலையில் ஸ்ட்ரீமிங் துறையில் ஒரு முக்கிய நிகழ்வாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோ சினிமா (Jio Cinema) ஸ்ட்ரீமிங் சேவையை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் (Disney+ Hotstar) இணைக்க உள்ளது. ரிலையன்ஸ் தலைமையில் கீழ் இயங்கும் வியாகாம் நெட்வொர்க்கும், டிஸ்னியின் ஸ்டார் இந்தியாவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, ஜியோ சினிமா வீடியோக்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இனி கண்டுகளிக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனமும், ஒரு தரப்பு பார்வையாளர்களுக்கு இரண்டு தளங்களை ஊக்குவிப்பது சரியல்ல என்பதை புரிந்து கொண்டுள்ளது. இதனால், வரும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்ப நிறுவனம் முன்வந்துள்ளது.இந்த ஒப்பந்தம் எதார்த்தத்தில் சாத்தியப்படும் பட்சத்தில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடி போட்டியை மேற்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நன்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இரு பெரும் நிறுவனங்களின் ஓடிடி தளங்கள் இணையும்போது, பெருவாரியான மக்களுக்குத் தேடும் கண்டென்டுகள் அவர்களுக்கு ஒரு தளத்தின் வாயிலாக கிடைக்கும் என்பதே சிறப்பு.
ஏன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்?
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நிறுவப்பட்ட பயனர் தளம் காரணமாக, ரிலையன்ஸ் அதை தனது முதன்மை ஸ்ட்ரீமிங் தளமாகத் தக்க வைத்துக் கொள்ளத் தேர்வு செய்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை ஜியோ சினிமாவில் ஒருங்கிணைப்பது அல்லது விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்திற்காக தனித்தனி தளங்களை பராமரிப்பது போன்ற விருப்பங்களைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓடிடியில் விளையாட்டுப் போட்டிகளின் தாக்கம்!
இதன் வாயிலாக மக்கள் அதிகம் கொண்டாடும் பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உள்பட பெரும்பாலான நேரலை விளையாட்டுப் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.
அதாவது, தற்போது ஐபிஎல்-லின் டிஜிட்டல் உரிமைகளை ஜியோ சினிமா வைத்திருந்தாலும், எதிர்கால சீசன்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்தியாவில் நேரடி கிரிக்கெட் ஒளிபரப்புகள் வாயிலாகப் பெறப்படும் அதிக பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
சிசிஐ ஒப்புதலும், ரிலையன்ஸின் உறுதிமொழியும்!
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2024 இல் டிஸ்னி-ரிலையன்ஸ் இணைப்பிற்கு இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India - சிசிஐ) ஒப்புதல் அளித்தது. மேலும், கிரிக்கெட் போட்டியின் போது போடப்படும் விளம்பரங்களுக்கான விலை உயர்வுகள் சரியான முறையில் நிர்வாகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.