ஜிகிரி தோஸ்த் - விமர்சனம்!
ரசிகனை கவரும் நோக்கில் ஓர் எளிய கதைக்குள்,கடத்தல், தீவிரவாதம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல அம்சங்களைக் கலந்து விறுவிறுப்பான கொடுக்க நினைத்தாலும் அதை புடம் போட்ட விதத்தில் டைரக்ட்ர் அரன், சொதப்பி விட்டார். அந்த தவறுகளே படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. இருந்தாலும், லோ பட்ஜெட்டில் வழங்கியுள்ள ஜிகிரி தோஸ்த் படம் ரொம்ப மோசம் என்று சொல்ல முடியாதபடி வழங்கி உள்ளார்கள்.
இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்களான ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் ஆகிய நெருங்கிய நண்பர்கள் இணைந்து 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்கும்படியான ஒரு சாதனத்தை அரன் உருவாக்குகிறார். ஆனால், அவருடைய கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்யாததால் கல்லூரி நிர்வாகத்தினால் நிராகரிக்கப்படுகிறது. இச்சூழலில் நகரில், மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் கடத்தப்பட, தான் கண்டுபிடித்த சாதனத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை காப்பாற்ற அரன் முடிவு செய்கிறார். அவருடன் மற்ற இரண்டு நண்பர்களும் களத்தில் இறங்க, அந்த சாதனம் சரியாக வேலை செய்ததா?, நண்பர்கள் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றினார்களா? என்பதே இப்படத்தின் கதை.
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று நண்பர்கள் நடித்திருக்கும் மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்று காட்டியிருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி அதிரடிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்கள்.ஷாரிக்கின் காதலியாக நடித்திருக்கும் அம்முஅபிராமி அதையும் தாண்டி ஆண் நண்பர்களுக்கு இணையான இன்னொரு நண்பராக இருக்கிறார். அவருடைய வேடம் இளம்பெண்களுக்கு உத்வேகம் தரக்கூடியது.திரைக்கதைக்குத் திருப்புமுனை தரும் அந்த வேடத்துக்குத் தன் நடிப்பின் மூலம் மேலும் பலம் சேர்த்திருக்கிறார்.
பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா,மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர், சரத், ஆகிய நடிகர்களும் படத்தில் இருக்கின்றனர். அவரவர் பிம்பத்துக்கேற்ற வேடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவர்களும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக மினிஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் வேடமும், அவருடைய நடிப்பும் நன்றாக இம்ப்ரூவ் ஆகி இருக்கிறது. வில்லத்தனத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், பல சீன்களில் பலே சொல்ல வைத்து விடுகிறார்..
கேம ராமேன்ஆர்.வி.சரண் ஒளிப்பதிவில்,பருந்துப்பார்வையில் விரியும் காட்சிகள் மட்டுமின்றி ,சின்ன அறைக்குள் நடக்கும் நிகழ்வுகளும் சரி, தெளிவும் துல்லியமும் வெளிப்படுவதே படத்தின் பலம். அதே போல் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மகேஷ் மேத்யூவின் சண்டைப்பயிற்சி நடிகர்களுக்குப் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது..
ஆனால் ஏகப்பட்ட விஷயங்களை சொல்ல வந்து எதையும் முழுவதுமாக சொல்ல முடியாமல், காமெடியிலும் கவனம் செலுத்தாமல், அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிற அளவில்தான் திரைகதையை பின்னி இருப்பதால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
மார்க் 2.5/ 5