ஜெயா தொலைக்காட்சியில் "சுவையோ சுவை"!
தமிழர்கள் ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவில் அறுசுவை அமையும்படி பார்த்துக்கொள்கின்றனர். அறுசுவை கோட்பாடு என்பது மரபு வழியாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.“அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்டமறுசிகை நீக்கி உண்டாகும்”என்ற நாலடியார் வரிகள் அறுசுவை உணவின் மரபை உணர்த்துகிறது. இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு எனச் சுவை ஆறும் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இச்சுவைகள் நாவோடு மட்டும் தொடர்புடையவை என எளிமைப்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு சுவையும் ஒரு குணத்தைக் கொண்டிருக்கிறது.
உடலுக்கும் அத்தன்மையை அளிக்கிறது என உணவு மருத்துவம் கூறுகிறது. இனிப்புச்சுவை வளத்தினையும், கார்ப்புச்சுவை வீறினையும், துவர்ப்புச்சுவை ஆற்றலையும், புளிப்புச்சுவை இனிமையையும், உவர்ப்பு தெளிவினையும், கசப்பு மென்மையையும் அளிக்கிறது. இச்சுவைகள் மேலும் சில பணிகளைச் செய்கின்றன. ரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர் ஆகிய ஆறு அடிப்படைத் தாதுக்களின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவைகளாகச் செயல்படுவதும் அறுசுவைகளே ஆகும். இச்சுவைகளில் குறைவு ஏற்பட்டாலும், கூடுதலானாலும் உடலுக்குக் கெடுதல் ஏற்படுகின்றன. இத்தகைய அறுசுவைகளும் தமிழர் உணவில் இயல்பாகவே அமைந்துள்ளதுதான் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது.
இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல விதமான சமையல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "சுவையோ சுவை" என்ற சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் பழனி முருகன் பாரம்பரியமான கோழி வடை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் , காடை மிளகு பிரட்டல், நாடன் நண்டு கறி, உருளை முட்டை மசாலா போன்ற பல விதமான சைவ அசைவ உணவு வகைகளை கிராமிய மணத்துடன் செய்து காட்டுகிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஷீத்தல் ஜோஷி.