ஜம்மு -காஷ்மீர் & ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு!
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 4ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஹரியானா வுக்கு அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ம் தேதியே ஹரியாணாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றதை தொடர்ந்து பாஜக - மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின் ஜம்மு காஷ்மீரை மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதனிடைய ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தக் கோரி கடந்த ஆண்டு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூடி பேசி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணைய குழு ஜம்மு காஷ்மீர் விரைந்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.அதேபோல் ஹரியானாவிலும் வரும் நவம்பர் 3ஆம் தேதியுடன் சட்டப் பேரவை காலாவதியாகிறது. அங்குள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. அண்மையில் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சியின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானாவில் 31 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனதா கட்சியும் - காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புது டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதன்படி செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 4ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஹரியானாவுக்கு அக்டோபர் 1ல் ஒரே கட்டமாக நடத்தப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
மேலும் கடந்த முறை, ஹரியானா உடன் இணைந்து மஹாராஷ்டிரா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதனால், மஹாராஷ்ட்ரா மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த தகவலும் இல்லை.இதற்கான காரணம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கடந்த முறை, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சேர்ந்து நடத்தப்பட்டது. காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. இந்த ஆண்டு நான்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இது முடிந்த உடன் அடுத்தபடியாக ஐந்தாவது மாநிலத்திற்கு தேர்தல் நடக்கிறது.படைகளின் இருப்பை கருத்தில் கொண்டு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவில் மழை காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதமாகி உள்ளது. அங்கு வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு, அங்கு தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு ராஜிவ் குமார் கூறினார்.