ஜமா - விமர்சனம்!
தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்றாகும். தெருவில் நடத்தப்படும் தெருக்கூத்து மூலம் கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் கலந்திருக்கும். பொதுவாக, ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் நன்கொடை வழங்குவர் கலைஞர்களுக்கு.கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களைக் கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அப்பேர்பட்ட தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்கள் பற்றி சில படங்கள் பேசியிருந்தாலும், இதுவரை யாரும் சொல்லாத ஒரு சமாச்சாரத்தை எடுத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படத்தை கொடுக்க ஆசைப்பட்டு இருக்கிறார் டைரக்டர் பாரி இளவழகன். 2 கே கிட்ஸூகளுக்கு தெரியாத தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களை வெள்ளித்திரையில் கெளரவமாக காட்டி அந்த கலையையும் ரசிக்கவும் வைக்க முயன்றிருக்கிறார்.
திருவண்ணாமலை பகுதியில் தெருக்கூத்து எனப்படும் ஜமாவில் பெண் வேடம் போடும் நாயகன் பாரி இளவழகன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான வேடங்களை போட்டு நடிப்பதோடு, எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். நாயகனின் அம்மாவுக்கோ மகனுக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்களே என்ற கவலை. பெண் போலவே நளினமாக மாறிப்போனதால் கூத்து தொழிலை விடச்சொல்கிறார். இதனிடையே கூத்து வாத்தியார் மகள் அம்மு அபிராமிக்கு நாயகன் மீது சிறு வயது முதல் காதல். அதனால், அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து ஜமாவில் பயணிக்கும் பாரி, தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கான வாய்ப்பு கிடைத்ததா? என்பதை சொல்வதுதான்‘ஜமா’ படக் கதை.
நிஜ கூத்துக் கலைஞர் என்பதால் கூத்துக் கலையை திரையில் கொஞ்சம் தெளிவாக கொண்டு வந்து பக்கா திரைப்படமாக எடுத்திருக்கிறார் நாயகன் பாரி இளவழகன். தலை நிறைய கூந்தல், நளிமான நடை, பெண்கள் சூழ உரையாடும் இயல்பு என்று நாடக உலகத்தின் மனிதராகவே மாறிப் போயிருக்கிறார். நடிப்பும் ரசிக்கவே வைக்கிறது. அதிலும் பெண் தன்மை காட்டுகிறேன் என்ற பெயரில் முகம் சுழிக்க வைக்கும் செயல்கள் இல்லாததால் கவனத்தை ஈர்த்து விடுகிறார் . குறிப்பாக க்ளைமேக்ஸில் அதிரடி ஆட்டம் காட்டி கைதட்டல் வாங்குகிறார்.
ஹீரோவுக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருப்பவர் அம்மு அபிராமி. கண்களாலேயே பேசுவது அவருக்கு பலமாக அமைந்து விட்டது. கூத்து வாத்தியார் தாண்டவன் என்ற ரோலில் வரும் சேத்தன் பல ரூபங்களைக் காட்டி அசர வைக்கிறார். நாயகனின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை மனதில் நிற்கிறார். மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தும் துணைக் கதாபாத்திரங்கள் படத்தை நகர்த்துகிறார்கள். பூனை என்ற பாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து, காலா குமார், ஏ.கே.இளவழகன், சிவ மாறன் என்று எல்லோரும் நாடக அனுபவம் உள்ள புதுமுகங்கள் என்பதால் நடிப்பில் இயல்பு தன்மை தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் கேமரா கிராமத்து எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் அதில் நடிப்பவர்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. குறிப்பாக தெருக்கூத்தில் இடம்பெறும் பாடல்களை தேவையான அளவு பயன்படுத்தியிருப்பதோடு, இறுதிக் காட்சியில் அந்த பாடலையே பின்னணி இசையாக பயன்படுத்தியிருப்பது, தெருக்கூத்து கலை மீது ரசிகர்களுக்கு பேரார்வத்தை தூண்டுகிறது.
ஆனால் எடுத்துக்கொண்ட கதைக் களத்தின் கனத்தை உயர்த்தும் நோக்கில் எந்த வருமானமும் இல்லாத ஒரு இடத்துக்கு பலர் போட்டி போட்டு போராடுவதாகக் காட்டி இருப்பதெல்லாம் ஓவர். அத்துடன் தன் காதலை எளிதாக கைவிடுவதும் , அர்ஜூனன் வேஷம் கட்டுவதற்கான காரணம் போன்றவை எடுபடவே இல்லை..
என்றாலும் இந்த ஜமா- பரவாயில்லை
மார்க் 2.75/5