’J பேபி’ - விமர்சனம்
நம்மில் பலர் சிறு வயதில் அம்மாக்களை அவ்வளவு பெரிய பொருட்டாக நினைத்ததில்லை. அம்மா இருக்கிறார். நமக்கு பசிக்கும் போது உணவு கொடுக்க, அப்பாவிற்கு சமைத்துப் போட, வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ள நல்ல துணிமணிகளை துவைத்துப் போட…. இதெல்லாம் ஒரு வேலையா என்று நாம் குறிப்பாக, ஆண் பிள்ளைகள் இந்த சம்பவங்களை கடந்து போயிருக்கிறோம்.அம்மாவின் தியாகங்கள் எவரெஸ்ட் சிகரங்களை மிஞ்சும். அந்தப் பிரசவ வலியில் நம்மைப் பெற்றெடுத்தது முதல் தியாகம். சிருஷ்டியின் பிரபஞ்ச விதிகளின் படி, ஆதாம் ஏவாள் துவங்கி வைத்த சம்பிரதாயமாக பிறந்தாலும், தம் குழந்தைகளுக்கு அம்மாக்கள் கொடுக்கும் முக்கியத்துவமும், பிரதானமும் குறிப்பாக இந்தியாவில் தியாகங்களின் உச்சம். கொடுமை என்னவென்றால் இதெல்லாம் புரிவதற்குள் அம்மாவிற்கு வயதாகி விடுகிறது. சிறு வயதில் அந்த தியாகங்கள் ஏதோ திரைப்பட போஸ்டர்களை போல கவனிக்காமல் கடந்து போகும் வாழ்க்கை வாழ்பவர்களைச் சுண்டி இழுக்கும்படி வயதான பிறகு பிள்ளைகள் மீது அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகையது என்பதையும், ஆனால் அதை பற்றி எந்தவித யோசனையும் இன்றி பிள்ளைகள் அவர்களை மிக சாதாரணமாக கடந்து செல்வதால், அவர்களின் மனம் எப்படி பரிதவிக்கிறது என்பதை சொல்லும் படமே J.பேபி.
அதாவது இரண்டு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்த ஊர்வசி, கணவர் காலமான நிலையிலும் எல்லா பிள்ளைகளையும் வளர்த்து, ஆளாக்கி திருமணமும் செய்து கொடுத்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டில் வசித்து வருகிறார். தனது பிள்ளைகள் போலவே அனைத்து பிள்ளைகளிடமும் அன்பு செலுத்தும் அவர், ஏதோ காரணத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு காணாமல் சென்று விடுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மேற்கு வங்காளத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் பேசமால் இருந்த அம்மாவை அழைத்துவர கொல்கத்தா செல்கிறார்கள். அவர் இருப்பதாக சொல்லப்பட்ட போலீஸ் ஸ்டேசன் போய் பார்க்கும் போது, அவர் அங்கிருந்து மகளிர் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக சொல்கிறார்கள். அங்கே சென்று பார்த்தால், அவர் அங்கிருந்து ஓடிவிட்டதாக சொல்ல நிலையில் அண்ணன், தம்பி இருவரும் ஊர் திரும்பி வருகின்றனர். ஊரை நெருங்கும்போது, காணாமல் போன அம்மா கிடைத்து விட்டார் உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் வருகிறது. அதைக் கேட்டு இருவரும் மீண்டும் கொல்கத்தா போய் அம்மாவை சந்திக்கிறார்கள் . ஆனாலும் அவரை உடனே சென்னை அழைத்து வர முடியாதபடி சட்ட சிக்கல் ஏற்படுகிறது அதில் இருந்து இருந்து அம்மாவை மீட்டு எப்படி தங்கள் ஊருக்கு அவரை அழைத்து வருகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியாக, சொல்வதே ஜெ பேபி சினிமாக் கதை..!
அவசரயுகமாகி விட்ட இவ்வுலகில் தாயன்பிற்கு ஓய்வில்லை என்றாலும், தாயின் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு இல்லாததால், 60 வயதை தாண்டியும் பெரும்பாலான அம்மாக்கள் அடுப்படியில் உழன்று கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் நேரம் உட்கார, மனம் விட்டு பிறரிடம் பேச முடியாமல், வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் காலத்லத்தைக் கழித்த அம்மாக்கள் கடைசியில், முதியோர் இல்லத்தில் துாக்கி எறியப்படும் காலக் கட்டத்தில் பேபியம்மா என்ற என்ற கேரக்டரில் வரும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். போலீசை பார்த்து மிரட்டுவது, எனக்கு இந்திரா காந்தியை தெரியும், ஸ்டாலினை தெரியும், ஜெயலலிதாவை தெரியும் என்று சொல்லி ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது, யாராவது ஏமாந்தால் கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு தவிக்க விடுவது என்று ஊர்வசி செய்யும் அலப்பறைகள் என படம் முழுவதும் பலவிதமான உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் ஊர்வசி ஒட்டு மொத்த படத்தை தாங்குகிறார்.!
காமெடி ஆர்டிஸ்டுகளில் ஒருவராக வந்து போய் கொண்டிருந்த மாறன், கேரக்டர் ஆர்டிஸ்டாக தன்னை அடையாளப்படுத்த இப்படத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தம்பி மீது ஏற்பட்ட பகையை அவர் வெளிப்படுத்தும் விதமாகட்டும், தனது வழக்கமான டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதெல்லாம் பர்பெக்ட்.ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தொப்பை வயிறுடன் கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். குடும்பத்துடன் சேர முடியாமல் தவிப்பவர் தனது மனவலியை வெளிப்படுத்தும் காட்சியில் மாறனை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் யோசிக்க வைத்துவிடுகிறார்.
ஊர்வசியை தேடிக் கண்டுபிடிக்க உதவும் மிலிட்டரிக்காரர் ரோலில் உண்மை சம்பவத்தில் ஒரு வயதான அம்மாவை கொல்கத்தாவில் காப்பாற்றி, அவர்களுடைய பிள்ளைகளிடம் சேர்த்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், எந்தவித அனுபவமும் இல்லாத நிலையில் ஸ்கோர் செய்கிறார்.
கேமராமேன் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவில் நீட்நெஸ் தெரிகிறது. டோனி பிரிட்டோவின் இசை மோசமில்லை..!
தனக்கு வேண்டியவரின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் டைரக்டர் சுரேஷ் மாரி, திரைக் கதையில் கொஞ்சம் அக்கறைக் காட்டவில்லை . மேலும் பலக் காட்சிகளின் நீளம் சலிப்பைக் கொடுக்கிறது
என்றாலும் அம்மா செண்டிமெண்ட் கதை என்பதால் -ஃபேமிலியோடு தியேட்டருக்கு போய் பார்க்க தகுந்த பட லிஸ்டில் சேர்ந்து விட்டது
மார்க் 3.25/5