For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒடிசா மக்கள் தலைவராக,நிழல் முதல்வராக அம்மாநில மருமகனாக மின்னும் பாண்டியன் கதையிது!

10:13 AM May 23, 2024 IST | admin
ஒடிசா மக்கள் தலைவராக நிழல் முதல்வராக அம்மாநில மருமகனாக மின்னும் பாண்டியன் கதையிது
Advertisement

டிசாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றுவருகிறது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இந்த முறை அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முனைப்பு காட்டிவருகிறார்கள். இந்த நிலையில், அங்கு பிரசாரம் செய்த மோடியும், அமித் ஷாவும். நவீன் பட்நாயக்கை விமர்சித்ததைவிட, வி.கே.பாண்டியனை டார்கெட் செய்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அமித் ஷா தனது பிரசாரத்தின்போது, ‘தற்போது ஒடிசாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரால் ஒடிசாவை ஆள முடியுமா? நீங்கள் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்து இங்கு பா.ஜ.க அரசு அமையுமானால், ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் இங்கு முதல்வராக வருவார்’ என்று பிரசாரம் செய்தார். இவர்கள் சுட்டிக் காட்டும் வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ்-ஸை ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கின் ’அரசியல் வாரிசு’ என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவரான வி.கே.பாண்டியன், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் ஆக பல முக்கியப் பதவிகளை வகித்து, கடந்த ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று, முழுநேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார். தற்போது ஒடிசாவில் மட்டுமின்றி, தற்போது அகில இந்திய அளவிலும் ஹாட் டாபிக் ஆகியுள்ளார் தமிழரான வி.கே.பாண்டியன்.

Advertisement

ஒடிசாவில் 20 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் இருந்து மாநிலம் முழுவதும் பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி, ஒடிசா மக்கள் மத்தியில் ஒன்றெனக் கலந்துவிட்டார் வி.கே.பாண்டியன். ‘ஒடிசாவின் பாகுபலி’ என்று ஒடிசா மக்களால் அழைக்கப்படுபவராகவும் அவர் இருக்கிறார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த வி.கே.பாண்டியன் எனப்படும் வி.கார்த்திகேயன் பாண்டியன், ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த பிறகு, நேரடி அரசியலில் குதித்தார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக்.

Advertisement

இப்பேர்பட்ட வி.கே.பாண்டியன் மதுரை மேலூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரான கூத்தப்பன்பட்டி என்ற வில்லேஜில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒடிசாவில் ஒர்க் செய்யத் தொடங்கிய இவர் அந்த மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுஜாதாவை மேரேஜ் செய்துக் கொண்டார். 2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) செயல்படுத்துவதில் காட்டிய ‘சின்சியாரிட்டி’ அவருக்கு விவசாயிகளிடம் செல்வாக்கை பெற்றுத் தந்தது.

2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த நிலையில், ரூர்கேலா மேம்பாட்டு முகமையில் மக்கள் பணத்தை முதலீடு செய்து திவாலாகிப் போன போது, பாண்டியன் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு பணத்தை திருப்பித் தந்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. அடிக்கடி புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் ஒடிசா பாதிக்கப்படும் போதெல்லாம் இவர் போர்க்கால வேகத்தில் நிர்வாகத்தை முடுக்கி மக்களை இன்னல்களில் இருந்து மீட்டது இவரை ஒடிசாவின் ஹீரோவாக்கியது! 2005ல், பழங்குடிகள் நிறைந்த மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் ஒற்றைச் சாளர முறையை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தியதில் பல்லாண்டுகள் காத்திருந்தோர் 19,000 பேருக்கு ஒரே ஆண்டில் சான்றிதழ் கிடைத்தது. இந்தப் பணி அவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. பின்னர், இதே அணுகுமுறை தேசிய அளவில் ஒரு முன்மாதிரியாக கொள்ளப்பட்டத்தில் ஹெலன் கெல்லர் விருது பெற்ற ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பை தந்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் நவீன் பட்நாயக் பாண்டியனை தன் சொந்த மாவட்ட மக்களுக்கு பயன்படுத்த விரும்பி, கன்ஜம் மாவட்ட ஆட்சியராக்கினார். அப்போது நூறு நாள் வேலைத் திட்டத்தை மிக விரிவாக செயல்படுத்தி ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்திற்கு பேருதவி செய்தார். அதில் பணியாற்றிய விவசாயக் கூலிகளின் ஊதியத்தை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் அணுகுமுறையை கையாண்டார். இந்த வகையில் 1.2 லட்சம் விவசாயக் கூலிகளுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தினார். இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நாட்டிலேயே சிறந்த முறையில் செயல்படுத்திய சிறந்த மாவட்டத்திற்கான NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.அந்த காலக்கட்டத்தில்தான் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அவர் நெருக்கமானார்.

அப்போது பாண்டியனை முதல்வர் நவீன்பட் நாயக் தன் தனிச் செயலாளராக நியமித்தார். சுமார் 12 ஆண்டுகள், அதாவது 2023 வரை அந்தப் பதவியில் இருந் காலகட்டத்தில் முதல்வரின் உள்ளக் கிடக்கையை நன்கு புரிந்து கொண்டு அபாரமாக செயலாற்றிய வகையில், 2019 இல் முதல்வரின் சிறப்பு திட்டமான ‘மாற்றத்திற்கான முன்னெடுப்புகள்’ என்ற 5T யின் செயலாளராக நியமிக்கப்பட்டு, அனைத்து துறைகளிலும் தலையிடக் கூடிய அதிகாரம் பெற்றார். அப்படி பணியாற்றியபோது, ஐ.ஏ.எஸ் பணி விதிகளை மீறி அவர் செயல்படுகிறார் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த விவகாரம், ஒடிசா சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களே வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், வி.கே.பாண்டியனுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அவர்களால் அசைக்க முடியவில்லை.இந்தச் சூழலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் விருப்பத்தின்படி 2023 இல், பாண்டியன் ஐ.ஏ.எஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, முறைப்படி பிஜு ஜனதாதளத்தில் உறுப்பினராகி கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெற்றார்.

ஆக, ஒடிசாவில் 20 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் இருந்து மாநிலம் முழுவதும் பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி, ஒடிசா மக்கள் மத்தியில் ஒன்றெனக் கலந்துவிட்டார் வி.கே.பாண்டியன். ‘ஒடிசாவின் பாகுபலி’ என்று ஒடிசா மக்களால் அழைக்கப்படுபவராகவும் அவர் இருக்கிறார். கடந்த மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை ஒடிசாவின் 147 தொகுதிகளையும் சுற்றி வந்து மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடல் நடத்தினார். இவரது பயணங்களும், மக்கள் சந்திப்பும், அவர்களின் பிரச்சினைகலை அறிந்து அவற்றை உடனுக்குடன் இவர் நிறைவேற்ற ஆணையிடுவதும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கை வளர்த்தன. இவர் போகும் இடமெல்லாம் மக்கள் இவரை பெருந்திரளாக வரவேற்பதிலும், கைகுலுக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகளுமே பாண்டியனை தாக்குவதில் முனைப்பு காட்டத் தொடங்கின!

பா.ஜ.க-வினரின் இந்த விமர்சனம் குறித்தும் வி.கே.பாண்டியன், ‘பா.ஜ.க தனது அரசியல் காரணங்களுக்காக என்னை ‘அவுட்சைடர்’ என்று விமர்சிக்கிறது. ஆனால், ஒடிசா மக்கள் அவ்வாறு சொல்வதில்லை. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒடிசாவில் பணியாற்றிவருகிறேன். ஒடிசா மக்கள் தங்களில் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் முதல்வர் நவீன் பாபுவின் கனவை நிறைவேற்றும் ஒரே லட்சியத்துடன் இருக்கிறேன். என்னை அவருக்கு வாரிசா? என்கிறார்கள்! ஆம், அவரது நற்பண்புகளுக்கு நான் வாரிசு அவ்வளவே” என்கிறார்.

இச்சூழலில் வி.கே.பாண்டியன் மீது யார் பாய்ந்தாலும், அவர் அசைக்க முடியாத அளவுக்கு அதிகார மையத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இது ஒடிசா அரசியலை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். எனவேதான், வி.கே.பாண்டியனை வீழ்த்துவதற்கு, அவரது அரசியல் எதிரிகள் எடுக்கும் ஒரே ஆயுதமாக ‘வெளிமாநிலத்துக்காரர்’ என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், அந்த விமர்சனத்தை எளிதாகக் கடந்துவிடக்கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்தவராக இருக்கிறார் வி .கே.பாண்டியன் என்பதுடன் ஒடிசா மக்கள் தலைவராக ,நிழல் முதல்வராக அம்மாநில மருமகனாக மின்னுகிறார் என்பதுதான் நிஜம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement