ஜர்னலிசத்தின் வரைமுறை நிதானமின்றி சென்றுக் கொண்டிருப்பது அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஜர்னலிசத்தின் வரைமுறை நிதானமின்றி சென்றுக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எது ஜர்னலிசம் என தெரியாமல் தடுமாறும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செய்தி பாணியை பார்த்து பல மூத்த ஜர்னலிஸ்டுகள் அதிர்ச்சி அடைந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். தனி நபர் விவகாரங்களை பொதுவெளியில் பெரிய செய்தி போல் பதிவு செய்வது, பாதிக்கப்படும் பெண்களை காட்சிப்படுத்துவது வர்ணனைகள் மூலம் இழிவுப்படுத்துவது, தனிநபர் பிரைவசியில் தலையிடுவது காட்சிகளை போட்டுவிட்டு மிரட்டி பணம் பறிப்பது என வேறு வகையில் பயணிக்கும் ஜர்னலிசத்துக்கு எடுத்துக்காட்டாக சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமீப காலங்களில் தமிழ் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட சில தனி நபர் அவதூறு செய்திகளால் தமிழக மக்கள் விழிப்புடன் விமர்சிப்பதை பார்க்கிறோம். பிரபல தமிழ் தொலைக்காட்சிகள் சில சென்னை பிக் புல் பார் பிரச்சினையில் வாடிக்கையாளர்களாக வந்த பெண்களை அவர்களின் உடை மற்றும் மது அருந்தியதை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, வர்ணனைகளை வைத்து செய்திகளை வெளியிட்டது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தி, பாலிமர் நியூஸ் மற்றும் நியூஸ் தமிழ் 24*7 ஆகிய நியூஸ் சேனல்களும் பெண்களை குறி வைத்து இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன. அதில் பார் பிரச்சனைகள் நேரம் கடந்து இயங்குவது குறித்து இல்லாமல் வாடிக்கையாளர்களாக வந்த ஜோடிகள், இளம்பெண்களை குறிவைத்து வர்ணனைகள் போடப்பட்டு தனிநபர்களை காட்சிப்படுத்தும், வசனங்கள், காட்சிகள் இருந்தது பாருக்கு வந்த வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
**சம்பவத்தின் பின்னணி என்ன? **
நேற்று முன் தினம் (நவம்பர் 19-ம் தேதி) 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின . இந்த போட்டியை காண சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மெரினா கடற்கரை தொடங்கி பெரிய பெரிய மால்கள் மற்றும் பார்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், சென்னை நந்தனத்தில் உள்ள “Big Bull” என்ற பாரிலும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடந்த பிரச்சனைகளை திசைத்திருப்பும் விதமாக , சட்டவிரோதமாக நள்ளிரவு வரை பார் செயல்பட்டதாகவும், இளம்பெண்கள் ஆபாச நடனமாடியதாகவும் நியூஸ் 24*7, பாலிமர், தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பரப்பட்டன.
அவர்கள் காட்சிப்படுத்திய விதத்தில் உள்ள முரண்கள் ஒருபக்கம் என்றால், நள்ளிரவில் பாரில் என்ன நடந்தது என்பது பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன அதை பார்ப்போம்.
நள்ளிரவு பார் மூடப்போகும் நேரத்தில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் அங்கு வந்து வந்துள்ளனர். பாருக்குள் தங்களை அனுமதிக்குமாறு கூறியுள்ளனர். அந்த 5 பேரும் நிதானமின்றி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேரம் முடிந்த காரணத்தால் அவர்களை அங்கிருந்த பவுன்சர்கள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 5 பேரும், நியூஸ் 24*7 தொலைக்காட்சியில் பணிபுரியும் சுதர்சன் என்ற நண்பருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பாருக்குள் அனுமதிக்க மறுத்ததை அடுத்து, போதையில் தகராறில் ஈடுபட்ட 5 பேரும் இங்கிருப்பவர்கள் அனைவரும் எப்படி வெளியே போகிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
‘எப்படியும் அந்த உள்ளே இருக்கும் பெண்கள் கீழே வந்துதானே ஆக வேண்டும்; வரும் வரை இங்கிருந்து நகர மாட்டோம். மீடியாவை வர வைக்கிறோம்'என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அந்த ஐந்து பேரும் மிரட்டிக் கொண்டிருந்தபோதே, நியூஸ் 24*7 கிரைம் செய்தியாளர் சுதர்சன் அந்த பாருக்கு வந்துள்ளார். “இங்கு என்ன சத்தம், என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டே அவர் உள்ளே நுழைய முயன்றதாக” சம்பவ இடத்தில் இருந்த பார் ஊழியர் ஒருவர் கூறினார்.
நியூஸ் 24X7 செய்தியாளர் சுதர்சன், தொலைக்காட்சி சேனல்களில் இரவு ட்யூட்டியில் இருந்த செய்தியாளர்களை அழைத்து, நந்தனம் BigBull பாரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுகிறார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார். சுதர்சன் பேச்சை கேட்டு பல சேனல்களில் இரவு பணியில் இருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உட்பட அனைவரும் இரவு 12:30 மணியளவில் அந்த பாருக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் அனைவரும் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பார் ஊழியர்கள், “பார் நேரம் முடிந்துவிட்டது, உள்ளே இருக்கும் வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல வேண்டும், வாடிக்கையாளர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என்று கேட்டும் பத்திரிக்கையாளர் பாருக்குள் கேமராவுடன் நுழைந்து பெண்களை வீடியோ எடுத்துள்ளனர். திடீரென வீடியோ கேமராக்களுடன் ஆட்கள் தங்களை படம் பிடித்ததால் செய்வதறியாது திகைத்த பெண்கள், ஜோடிகள் தங்கள் முகத்தை மறைத்தப்படி ஓடிய போது பாட்டுப்பாடி கிண்டலடித்தப்படி வீடியோ எடுத்துள்ளனர்.
இதற்கிடையே அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் ஒரு குழு ஆண்கள் மற்றும் பாரின் பவுன்சர்களுக்கு இடையே நடந்த மோதல்களை பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில், சிலர் மதுக்கடைக்குள் நுழைய முயல்வதும், அவர் பவுன்சர்களால் தடுக்கப்படுவதும் அதில் பதிவாகியுள்ளது.சில நொடிகளில் அந்த நபருடன் 5 பேர் சேர்ந்து உள்ளே, செல்ல முயற்சிக்கும் காட்சிகளும் அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ளது. அதில் பார் மேலாளர் உள்ளிட்டோர் கீழே தள்ளிவிடப்படும் காட்சிகளும், பின்னர் கேமரா மைக்குகளுடன் சூழ்ந்து வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே பாரில் இவர்களால் ஏற்பட்ட பிரச்சனை சமாளிக்க முடியாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பார் ஊழியர்கள் தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மற்றொரு வழக்கை விசாரித்து கொண்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் பாருக்குள் என்ன நடக்கிறது என்று விசாரித்து கொண்டிருந்த நிலையில், மற்ற தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்களும் அடுத்தடுத்து அங்கு வந்து குவிந்துள்ளனர். இது செய்தி எடுப்பதாக தெரியவில்லை அங்கு நடைபெற்ற முழுப் பிரச்சினையும் ஏதே பழிவாங்கல் நடவடிக்கை போல் தெரிவதாக அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தனது நண்பர்களுக்கு ஆதரவாக பேசி, பின்னர் ஊடக நண்பர்களை வரவழைத்த அந்த செய்தியாளர் சுதர்சனிடம் கேட்டபோது, அவர் க்ரைம் பீட்டில் இருப்பதாகவும், தனக்குத் தகவல் கிடைத்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார். பப்பிற்குள் ஆட்கள் இருந்ததாலும், பிரச்சனை ஏற்பட்டாதாலும், அதை தெரிந்து கொள்ள முயற்சித்த போது பவுன்சர்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததாலும் தான் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
இருந்தாலும், செய்தி தமிழ் 247 முதலில் ஸ்பாட்டுக்கு வந்தாலும், மறுநாள் (திங்கட்கிழமை) மாலை வரை அவர்கள் அந்த செய்தியை ஒளிபரப்பவில்லை என தெரிகிறது. மேலும் செய்தியை ஒளிப்பரப்பாமல் இருக்க பார் நிர்வாகத்திடம் நியூஸ் 247 செய்தியாளர் சுதர்சன் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மூத்த காவல் அதிகாரிகளின் துணையுடன் செய்தியாளர் சுதர்சன் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஏற்கெனவே சென்னையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் நுழைந்து இதுபோன்று சட்டவிரோதமாக வீடியோ பிடித்து செய்தி வெளியிட்டதாகவும் பல குற்றசாட்டுகள் இவர் மீது உள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பிக் புல்’ பார் சம்பவம், குறித்து நியூஸ் தமிழ் 24/7 செய்தி சேனல் உரிமையாளரிடம் பேசிய போது இந்த செய்தி ஒளிப்பரப்பியது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் தற்போது சென்னையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் .
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற செய்தியாளர் சுதர்சனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் எதுவும் பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பார் மீது எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்,விதிகளை பின்பற்றுவதாக உறுதிமொழியை சமர்ப்பிக்குமாறு மதுக்கடையின் உரிமையாளரிடம் கேட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மூத்த காவல் அதிகாரி ஒருவரிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, பிரச்சனை ஏற்பட்டபோது அதை தடுக்கவில்லை என்று கேட்ட போது, பாரில் இருந்த பெண்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதிலே கவனமாக இருந்ததால் உடனடியாக இந்த பிரச்சனையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தந்திடிவி, பாலிமர் நியூஸ் மற்றும் நியூஸ் 24x7 சேனல்களில் ஒளிப்பரப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஒளிப்பதிவாளர்கள் எடுத்த காட்சிகள் அனைத்தும் பெண்களின் ஆடைகளையே குறி வைத்து எடுத்தது போன்றே தோன்றுகிறது. படம் எடுக்கும் போது சேலை கட்டிய தமிழச்சியை எடுடா என்று கூறி சினிமா பாடலை பாடி கிண்டல் செய்தபடி எடுத்தது காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த நிகழ்வு அதோடு நிற்கவில்லை. தந்தி டிவியின் தலைப்புச் செய்திகள் ‘இரவு முழுவதும் மது விருந்து காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது’ என்றும், ‘சம்பவத்தின் போது அரைகுறை ஆடை அணிந்த பெண்கள் வெளியே ஓடினர்’ என்றும் “அலறினர்” என்றும், செய்தி வெளியிட்டது. இதற்கிடையே ஒரு பெண் ஒரு கேமராமேனிடம் தன்னைப் படம் எடுப்பதை நிறுத்தச் சொல்வதையும் அந்த வீடியோவில் காணலாம், மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் கூறினார். அதற்கு ஒளிப்பதிவாளர் கேவலமான தொனியில், “போடு, போடு. போ, போ” என்று கூறியபடி முன்னாடிச் சென்று தொலைந்துப்போ என்று ஒருமையில் பேசியபடி படம் பிடித்ததும் பதிவாகியுள்ளது.
மேலும் “தயவுசெய்து… தயவு செய்து போங்க, இரவில் பெண்கள் செய்த செயல், சத்தமில்லாமலே வந்த போலீஸ், இரவில் நடந்த பரபரப்பு,” என்ற வர்ணனையுடன் thumbnail வைத்து செய்தி வெளியிட்டுள்ளன. “பகாடி பெண்கள்” என்று பெண்களை மட்டுமே குறிவைத்து வர்ணனைகள், தம்னைல்கள் ஊடகத்தில் உள்ளவர்கள் மனநிலையை பொதுவான மனநிலை போல் வெளியில் பதிவு செய்வதை காட்டியது.
பார் பிரச்சனை, நேரம் கடந்து திறந்து வைத்திருக்கும் செய்தியை போடுவதற்கு பதில் வாடிக்கையாளர்களாக வந்த பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடை அணிந்து பாரில் இருப்பதை, ஒரு 'ஒழுக்கமற்ற'நடவடிக்கை, பெண்கள் மட்டுமே இதற்கெல்லாம் காரணம் என்பது போல் காட்ட முயற்சிப்பதாகவே இப்படி மீண்டும் மீண்டும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தந்தி டிவியின் யூடியூப் வெளியான காட்சிகளில்,“சென்னை பப்பில் மன்மத கூத்து, ரெய்டில் சிக்கிய கிளுகிளு பறவைகள் - மூஞ்சை மூடி கொண்டு தெறித்து ஓடிய ஜோடிகள், என்றும் Thumbnail போட்டு தங்களை கேவலப்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தனர்.
மேலும், 'மன்மத கூத்து 'மற்றும் 'கிளுகிளு பறவைகள்' , ‘பகாடி பெண்கள்’ போன்ற ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே பாலிமர் நியூஸ், அதன் கவரேஜில்,. “சென்னயில் பார்-இல் சவுண்டுதான் லேடீஸ் லூட்டிகள், ரவுண்டு கட்டிய போலீஸ், நிக்காம்மா ஓடு, நிக்காம்மா ஓடு”, என அவர்களின் யூடியூப் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் நியூஸ் தமிழ் 24*7, பாரில் இருந்து வெளியேறும் பெண்களை “எல்லாம் குடி போதை, எல்லாம் குடி போதை” என்று கூச்சலிடுவது போன்று வெளியிட்டுள்ளது. மேலும் X-தளத்தில் அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், பெண்கள் அணிந்திருந்த ஆடைகளை குறிவைத்து, "விடிய விடிய மது போதை, பெண்கள் திண்டாட்டம்"என்று குறிப்பிட்டு யூடியூப்பில் தலைப்பிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும். “பப்-ல மப்புல தெரித்து ஓடியா இளசுகள். போதையில் உளறிய பணக்காரப் பெண்கள்” (பப்பை விட்டு ஓடிய இளைஞர்கள், கும்மாளமிடும் குடிகாரப் பணக்காரப் பெண்கள்).என்ற தலைப்பிட்டு . பெண்களை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊடகம் என்பது, மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும். மக்களுக்கு அநீதி இழைக்கும், விதிகளை மீறும், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளும் வர்க்கத்தினரைப் பற்றி பேச வேண்டும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேச வேண்டும்.
‘கிளு கிளுப்பூட்டும்'விஷயங்களை செய்தியாக்குவதற்கும், ஆபாச படம் எடுப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இப்படிப்பட்ட ஆபாச செய்திகளை வெளியிடுவதற்கென்றே நாற்பதுகளில் 'இந்து நேசன்'என்ற ஒரு பத்திரிக்கை இருந்தது. திரைத்துறையை சேர்ந்தவர்களைப் பற்றி ஆபாசமான செய்திகளை வெளியிடுவதற்கென்றே இருந்த பத்திரிகை. இதன் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலையே செய்யப்பட்டார்.
அப்படி ஆபாச பத்திரிக்கைகள் தனியாக இருட்டுக்குள் இருந்த நிலை இன்று மாறி, வெகுஜன ஊடகங்களே ஆபாசத்தை அரங்கேற்றி, வீட்டு வரவேற்பறைக்குள் ஆபாசத்தை கொண்டு நிறுத்தியிருப்பது ஊடகத்துறையின் வீழ்ச்சியை காட்டுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுயபரிசோதனை செய்து, தாங்கள் செய்வது ஊடகவியல்தானா என்பதை கேட்டுக் கொள்ள வேண்டும்.