For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக நாடுகள் காடழிப்பைத் தடுக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் காட்டாதது அதிர்ச்சி!

08:23 PM Oct 24, 2023 IST | admin
உலக நாடுகள் காடழிப்பைத் தடுக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் காட்டாதது அதிர்ச்சி
Advertisement

காடுகள் அழிப்பு காரணமாக ஆண்டுக்கு சுமார் 1,500 கோடி மரங்களை நாம் இழந்து வருகிறோம் என வன மரபியல், மரப்பெருக்கு நிறுவன மூத்த விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்திருந்த சூழலிலும் ,காடுகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உலக நாடுகள் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட போதிலும் 2022ஆம் ஆண்டில் காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இது 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய வருடாந்திர இலக்குகளில் 21% பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

Advertisement

2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை ஒழித்து 350 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக நாடுகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உறுதிமொழிகளின் தற்போதைய நிலையை மதிப்பிடும் ஒரு புதிய ஆய்வை பல்வேறு குடிமைச் சமூகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் கூட்டணி மேற்கொண்டது. 2022 ஆம் ஆண்டில், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதில் உலகளாவிய முன்னேற்றம் மிகவும் மெதுவாக நகர்ந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் மோசமடைந்த தாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

Advertisement

குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 66 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 4 விழுக்காடு அதிகம் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கால்நடை வளர்ப்பு, சோயா, பாமாயில் உற்பத்தி மற்றும் குறு விவசாயம் உள்ளிட்ட செயல்பாடுகள் காடு இழப்பிற்கு முன்னணி காரணமாக இருக்கின்ற நிலையில், சாலை விரிவாக்கம், தீ விபத்து மற்றும் வணிக ரீதியான மரம் வெட்டுதல் ஆகியவையும் காடழிப்பில் பங்கு வகிப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2022ஆம் ஆண்டில் காடழிப்பினால் மட்டும் வெளியான பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு அதிகம் எனவும் 1970 முதல் 2018 வரையிலான காலத்தில் உயிர் வாழவும் இனப்பெருக்கத்திற்கும் காடுகளை நம்பியிருந்த உயிரினங்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் பன்னாட்டு காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயராமல் தடுப்பதற்காக காடுகள் அழிப்பை 2030ஆம் ஆண்டிற்குள் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றில் 141 நாடுகள் இணைந்து கையெழுத்திட்டன. இந்த உடன்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக நாடுகள் காடழிப்பைத் தடுக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் காட்டாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பூவுலகின் நண்பர்கள்

Tags :
Advertisement