'லவ்வர்ஸ் கட்டிப்பிடித்து முத்தமிடுவது இயல்பே' - ஐகோர்ட் தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்மை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் காதலிக்கும் போது, இளைஞர் தம்மை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக அந்த பெண் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் இளைஞர் மீது ஐபிசி 354ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், பருவ வயதில் காதலிக்கும் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த இயல்பாக நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர வேறில்லை.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போலீஸார் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அந்த வழக்கை நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யலாம். அந்த அடிப்படையில் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.'' இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.