தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தவறான தகவல்களுக்கு பலியாகாமல் தற்காத்துக் கொள்வது அவசியம்!

09:35 AM Jan 22, 2025 IST | admin
Advertisement

ங்கள் தளத்தில் பதிவிடுபவை உண்மைதானா எனச் சரிபார்ப்பதைக் கைவிடுகிறது மெட்டா. இனிமேல் உண்மையோ பொய்யோ எதை வேண்டுமானாலும் பதிவிட பேஸ்புக், திரெட்ஸ் உள்ளிட்ட தளங்களைத் தாராளமாகத் திறந்துவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்று இதற்குச் சிலர் பெயர் வைத்திருக்கிறார்கள். மெட்டா தலைவர் மார்க் சக்கர்பெர்க் வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பொன்றில் இம்முடிவைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார்.தங்கள் தளங்களில் பதிவிடப்படும் விஷயங்கள் தணிக்கை செய்யப்படுவதும் பேஸ்புக் சிறையில் வைக்கப்படுவதும் இனிமேல் குறையும் என்கிறார் மார்க். ஆனால், உண்மையா எனச் சரிபார்ப்பது தணிக்கையாகாது. பேஸ்புக் மூன்றாம் தரப்புடன் இணைந்து இவ்வகையான சரிபார்ப்பினைச் செய்கிறது.

Advertisement

சந்தேகத்துக்குரிய செய்தி இருப்பின் அவற்றை மட்டுப்படுத்துகிறார்களேயன்றி தணிக்கை செய்வதில்லை. தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்து, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கம் போன்ற சிலவற்றை மட்டும் முற்றிலும் நீக்குகிறார்கள். மூன்றாம் தரப்பு சரிபார்க்கும் விதத்தில் குறைகள் இருந்தாலும் அவை தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு மேம்பாடு கண்டுள்ளன. இந்த சரிபார்ப்பு நடவடிக்கை தொடங்கியது 2016ஆம் ஆண்டில். அமெரிக்கத் தேர்தல் காலத்தில் பொய்த்தகவல்கள் அதிகளவில் பரப்ப பேஸ்புக் பயன்பட்டது. ஆட்சிக்கு வந்தது ஜனநாயகக் கட்சி. அவர்களின் கொள்கைப்படி பேஸ்புக் தலைவரும் தங்கள் தளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டிவந்தது. டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் கணக்கை முடக்கியது கூட அரசியல் நிலவரத்தை உணர்ந்த மார்க் சக்கர்பெர்க்கின் தொழில் ரீதியான முடிவு என்றால் மிகையல்ல.

Advertisement

தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபராகிவிட்டார். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப வேறொரு முடிவை அறிவித்திருக்கிறார் மார்க். முந்தைய முடிவிலும் இப்போதைய முடிவிலும் பயனர்கள் பற்றிய அக்கறை முதன்மையானதல்ல. இனிமேல் கம்யூனிட்டி நோட்ஸ் முறையைக் கையாளப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது ஏற்கெனவே எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் கையாளப்படுகிறது. ஆட்சேபணைக்குரிய பதிவு ஒன்றைப் பார்த்ததும் கம்யூனிட்டி நோட்ஸ் உறுப்பினர் ஒருவர் அதை மறுத்துப் பதிவிடலாம். இது மற்ற எக்ஸ் பயனர்களுக்குத் தெரியும் விதத்தில் இருக்காது. அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிட்டி நோட்ஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பதிவை மறுத்து எழுதிய குறிப்பானது மற்ற பயனர்களுக்குக் காண்பிக்கப்படும். பொய்யைப் பொய் எனச் சுட்டிக்காட்டிய குறிப்பை உபயோகமானதில்லை என அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் கும்பலாகச் சேர்ந்து

வாக்களித்தால் மற்ற யாரும் அந்தக் குறிப்பை எந்நாளும் பார்க்கவே முடியாது. யார் வேண்டுமானாலும் அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிட்டி நோட்ஸ் உறுப்பினர் ஆகலாம். பெரும் பான்மை அடிப்படையில் செயல்படும் இத்தகைய கம்யூனிட்டி நோட்ஸ் முறை அப்படியே மெட்டாவில் வரப்போகிறதா என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தினாலே அந்தப் பதிவு மற்றவர்களுக்குக் காண்பிப்பதை பேஸ்புக் மட்டுப்படுத்துகிறது என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம். தமிழ்நாட்டில் இதனால் அதிகம் பாதிக்கப்டுவது முற்போக்குக் கருத்துடையோர் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் ஒப்பீட்டளவில் உண்மைச் சோதனைகளில் அடிப்படைவாதக் கருத்துள்ளோர் அதிகம் சிக்குகிறார்கள் என்கின்றன உலகளாவிய தரவுகள்.

தங்கள் கருத்து முடக்கப்படுவதாகவும் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதும் இவர்கள் வாதமாக இருக்கிறது. அடிப்படைவாதக் கருத்துடையவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அதிகம் வெளியிடுகின்றனர் என்பதை தரவுகள் உறுதிசெய்கின்றன. தவறான தகவல்கள் சமூக அமைதியைக் குலைக்கின்றன. அதைக் கட்டுப்படுத்துவதில் சமூகவலைத்தளங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதிலிருந்து விலகுவதன் மூலம் மேலும் அதிக பொய்களுக்குத் துணைபோகின்றன பெருநிறுவனங்கள்.அதிலும் தேர்ந்தெடுத்த அடிப்படைவாதப் பொய்கள் மட்டுமே நம்மை வந்து சேர வாய்ப்பிருக்கிறது. சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் தலைமைகளின் நிலைப்பாடும் அதுதான்.

சரி, இதில் நாம் செய்யக்கூடியதுதான் என்ன? தவறான தகவல்களுக்கு பலியாகாமல் நம்மைத் தற்காத்துக் கொள்வது ஒன்றுதான் நம்மாலானது. சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் செய்தி எதுவாக இருந்தாலும் அதைச் சொல்பவர் யார் என்பதைக் கவனிப்பது முதன்மையானது. வாயைத் திறந்து எதைப் பேசினாலும் பொய்யாகத்தான் இருக்கும் என யூகிக்கக் கூடிய நபர்கள் நம்மிடையே உண்டு. அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் சொல்பவற்றைச் சந்தேகிக்கப் பழகவேண்டும்.சில நேரங்களில் சந்தேகம் எழுந்தாலும் நம்முடைய சாதி, மத, இன, பாலின அடையாளங்களில் நமக்கிருக்கும் பற்றினால் உண்மையாகத்தான் இருக்கும் என நம்பவே விரும்புவோம். அது சராசரி மனித இயல்பு. உணர்வுகளைத் தள்ளி வைத்துத் தகவலின் உண்மைத்தன்மையை எடைபோட்டால் சராசரிக்கும் சற்று மேலே உயரலாம்.

தகவல் உண்மையாக இருந்தாலும் சொல்லப்பட்ட தேதியும் இடமும் என்ன என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். தமிழின் தொன்மையைச் சொல்ல தமிழ் காட்டு மிராண்டிகளின் மொழி எனப் பேசியிருந்தால் அதைக் குறைகூற முடியாதே. பேசியது உண்மைதான் என்றாலும் துண்டாக அதை வெட்டி எடுத்து வாதம் செய்வதில் உள்நோக்கமிருப்பதைப் பகுத்தறியும் தேவை உள்ளது.முன்பு போலன்றி இப்போது தகவலைப் பெறுவது எளிதாகவிட்டது. இந்தப் பிரபலம் இதைச் சொன்னார் என்கிற செய்தியைப் பார்த்தால் அவருடைய சமூகவலைத்தளக் கணக்குக்குச் சென்று பார்ப்பதில் கூடுதலாக ஒரு நிமிடம் செலவாகும். அப்படிச் சரிபார்க்க நேரமில்லை என்றால் செய்தியைப் பகிரவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது என்கிற சுயகட்டுப்பாடு இருக்கவேண்டும்.செய்திகளைச் சரிபார்த்துச் சொல்லவென்றே ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றைப் பின்தொடர்வது நல்லது. பொய்த்தகவல்களில் இருந்து நம்மை நாமேதான் காப்பாற்றிக்கொள்ளமுடியும். உண்மை சிக்கலானது. அதற்கு நேரம், பணம், உழைப்பு என ஏதோ சிலவற்றைச் செலவிடவேண்டும். எளிதாக இருக்கிறதென்று முதலில் கண்ணில் படும் செய்தியை நம்பி நம் தரத்தையும் சமூகத் தரத்தையும் கீழிறக்கி விடுகிறோம்.

கோகிலா பாபு

Tags :
FacebookfactFact-Checkfake newsmark zuckerbergmetanewsஉண்மை செய்திவதந்தி
Advertisement
Next Article