பிள்ளையாருக்கு யானைத் தலை வந்த கதையிதுவும்தான்!
விநாயகர் சதுர்த்தி வந்தாலும் வந்தது. புத்தர் சிலையின் தலையை உடைத்து பதிலுக்குப் பிள்ளையார் தலையை மாட்டி வைத்துவிட்டார்கள் என்று பதிவுகள்..அதற்கு எதிர்ப்பதிவுகள்.. இப்படி சுறுசுறுப்பாக ஓடுகிறது சமூக ஊடகம். அந்த தலையுடைப்பு, தலைமாட்டல் பதிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே ஒரு தலை உடைப்பு தலைமாட்டல் நிகழ்வைப் பாருங்கள்.
‘விழுதாகி வேருமாகி’ என்ற புத்தகத்தில் 25, 26ஆம் பக்கங்களில் காணப்படுகிறது இந்த நிகழ்வு.
.......
1995ஆம் ஆண்டு சூரியக்கதிர்-01 நடவடிக்கை மூலம் யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியை பிடித்த சிங்கள ராணுவம், அதைத் தொடர்ந்து சூரியக்கதிர்-02 என்ற பெயரில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியைக் கைப்பற்றத் திட்டமிடுகிறது. இதற்கு எதிராக போராளிகள், வடமராட்சியில் உள்ள வாதரவத்தை, கப்புதூ, மண்டான் பகுதிகளில் தொடர் காப்பரண்களை அமைக்கிறார்கள்.வாதரவத்தைக்கும், யாக்கரைப் பகுதிக்கும் இடைப்பட்ட மண்டான், வல்வைவெளி பகுதிகள் உப்புவெளிகள். மழைகாலங்களில் தொண்டைமானாற்று உப்பேரி பெருகி, மழைநீரும், கடல்நீரும் சேர்ந்து வல்வைவெளி வழியாக வடமராட்சி கிழக்கைநோக்கிப் பாயும்.
நீரோட்டம் முடிந்து குறிப்பிட்ட சில இடங்களில் தேங்கி நிற்கும் நீர், உப்பாக மாறும். இந்தப் பகுதி சிறுசிறு புதர்கள், பூவரசு, பனைமரங்கள் நிறைந்த பகுதி. புவியியல் ரீதியில் இது மனிதர்கள் வாழ்வதற்கோ, போர் செய்வதற்கோ ஏற்ற இடமல்ல. 1987ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் லிபரேஷன்’ என்ற ராணுவ நடவடிக்கையை சிங்கள ராணுவம் முன்னெடுத்து வடமராட்சியைப் பிடித்தபோது, தென் மராட்சியை நோக்கிய திசையில் அமைந்திருந்த வடமராட்சியின் கடைசி நகரமான கப்புதூவுக்கு ராணுவம் வரவில்லை.
காரணம், பரந்த உப்புவெளிக்கு அப்பால் நீண்ட தொலைவில் தனித்திருந்த அந்தப் பகுதி, போருக்கு உகந்த பகுதியில்ல. அதனால் ராணுவம் அங்கே வரவில்லை.
இந்தநிலையில் சூரியக்கதிர்-02 ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சி, வடமராட்சி பகுதி மக்கள், தென்மராட்சிக்கு இடம்பெயர ஆரம்பிக்கின்றனர். யாக்கரை வெளி வழியாக அவர்களது நடைபயணம் தொடங்குகிறது. இந்தநிலையில் முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர், கரவெட்டி பகுதியின் பின்புறம் அமைந்திருந்த யாக்கரையில், உப்புவெளியைப் பார்த்தவாறு இருந்த பிள்ளையார் சிலையைப் பார்க்கின்றனர்.
பிள்ளையாரின் யானைத் தலையை உடைத்து எறிந்துவிட்டு, இரத்தம் ஒழுகியபடி இருந்த ஓர் ஆட்டுத்தலையை பிள்ளையார் சிலையில் தலைக்குப் பதிலாகப் பொருத்துகிறார்கள். பிறகு அந்தப் பகுதியிலே நின்று கொள்கிறார்கள்’
இப்படி ஒரு நிகழ்வு அந்தப் புத்தகத்தில் காணப்படுகிறது.
1995ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்தபோது பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டதையோ, ஆட்டின் தலை அறுக்கப்பட்டு பிள்ளையார் சிலையில் மாட்டப்பட்டதைப் பற்றியோ, இந்தியாவில் கவலைப்பட வேண்டியவர்கள் யாரும் கவலைப்படவில்லை. அதைக் கண்டுகொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.