இஸ்ரோவின் இன்சாட் -3டிஎஸ் -விண்ணில் நிலைநிறுத்தம்!
இஸ்ரோ வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுவெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது .இது பூமியின் பருவ நிலை மாற்றத்தை துல்லியமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலமாக புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் இஸ்ரோ, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 சேனல் இமேஜர் உள்ளிட்ட 25 விதமான ஆய்வு கருவிகள், பூமியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து, வானிலை தகவல்களை வழங்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதை 2 நாட்களுக்கு முன்பே கண்டறிய முடியும். அதேபோல புயல் கரையை கடக்கும் இடத்தை சுமார் 20 கிலோ மீட்டர் துல்லியத்தில் கண்டறிய முடியும். மேலும், பேரிடர் காலங்களில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களை துல்லியமாக அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் நேற்று (16-02-24) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. மேலும், இந்த ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் இன்று (17-02-24) மாலை 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து,விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்துகளை தெரிவித்தார்.