ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணி உரிமையாளரானார் நடிகர் சூர்யா!
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் - T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் டி10 கிரிக்கெட் மற்றும் மைதானத்தில் நடக்கும் ஸ்டிச் பால் கிரிக்கெட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அணியினை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ISPLT10 கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது, இதில், மும்பை அணியை பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் வாங்கி இருந்தார். அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணியை நடிகர் ராம்சரண் வாங்கி இருந்தார்.பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும் வாங்கி இருந்தார்கள்..
இப்படி முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு அணியை வாங்கி வரும் நிலையில், தமிழ்நாடு சார்பில் விளையாடவுள்ள சென்னை கிரிக்கெட் அணியை நடிகர் சூர்யா வாங்கி உள்ளார். இதனை அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” வணக்கம் சென்னை! ‘ISPLT10’- இல் எங்கள் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என அறிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக விளையாட ஆர்வம் உள்ளவர்கள் சூர்யா கொடுத்துள்ள அந்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.