For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

06:38 PM Jan 26, 2024 IST | admin
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்
Advertisement

சையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் நடைபெற உள்ளன. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பவதாரிணியின் குரல் Unique மட்டுமில்லை, நமது வீட்டுக் குழந்தைகள் இசையை அறிமுகம் செய்து கொண்டு வீட்டிற்குள் பாடிப்பழகித் திரிவார்களே அப்படி ஒரு நெருக்கமானது. இதயத்திலிருந்து பாடியவர். சில நேரங்களில் தொழில்நுட்ப நேர்த்திகளைக் கூட இழக்கத் துணிந்தவர்.பவதாரிணி இளையராஜாவின் மகள் என்பது ஒரு கூடுதல் தகவல் மட்டுமே, அவர் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகி. இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.பவதாரணியோட குரல் ரொம்பவே தனித்தன்மையானது. அவர் பாடல்களெல்லாம் நம்மை அப்படியே லயிக்க வைக்கும். அவரின் குரல் மனதின் ஓரத்தில் எங்கேயோ ஒளிந்திருந்து அப்பப்போ நமக்கே தெரியாமல் முணுமுணுப்பாக வந்துவிட்டுப் போகும். ஆனால், அவர் நிறைய பாடல்கள் பாடவே இல்லை வருத்தமே. மிகக்குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாடல்களையே பாடியுள்ளார்.

Advertisement

இவர் தமிழில் முதலில் பாடிய பாடல் இளையராஜா இசையில் ‘ராசய்யா’ படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல். அந்தப் பாட்டு இப்போதுவரையும் பலரின் பிளே லிஸ்ட்டில் இருக்கும். ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற’ பாடல் அனைவரையும் ரொம்பவே கவர்ந்தது. இதன்பிறகு பவதாரணியின் குரலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டில் பவதாரணிக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த பாட்டு ‘பாரதி’ படத்துல வரும் ’மயில் போல பொண்ணு ஒன்னு’ பாட்டுதான். இந்த பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அவ்வளவு பெரிய அமைதியாக இருக்கும். அதேபோல ‘அழகி’ படத்தில் இளையராஜா இசையில் பவதாரணி பாடிய ‘ஒளியிலே தெரிவது ‘ பாட்டு இப்போதும் பெரும்பாலானோரின் பேவரிட். அதுல வர்ற பவதாரணி வாய்ஸ் இன்னும் இன்னும் ஸ்பெஷல்.

இயல்பிலேயே மிக மென்மையானவராகவும், வெளிச்சத்தைக் கண்டு அஞ்சுபவராகவும் இருந்தவர், கடந்த சில ஆண்டுகளாகவே நோயின் பிடியில் சிக்கி துயருற்றிருக்கிறார். நமது தமிழ் சமூகத்தில் பெண் குழந்தைகள் மீது தந்தையருக்கு ஒரு தனித்த நேசம் இருக்கும். அதிலும் தகப்பன் துணைவியை இழந்துவிட்ட பிறகு பெண் குழந்தைகள் தந்தையரின் மீது காட்டுகிற அன்பும், அரவணைப்பும் அலாதியானது. பவதாரிணியின் கணவர், பதிப்பாளர், விளம்பர நிறுவனர் திரு.சபரிராஜ், யுவன், கார்த்திக் மற்றும் இளையராஜா குடும்பத்தினர் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை பெற்றுக் கொள்ளட்டும்.

முதல்வர் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ``பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரணி, தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.``இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement