டிஜிட்டல் யுகத்தால் மட்டமாகும் நிருபர்களின் மரியாதை!
ஊடகக்காரர்களுடனான சந்திப்பின்போது, ஊடகக்காரர்களை ‘வாடா, போடா’ என்றும் ‘உனக்கெல்லாம் என்னடா மரியாதை?’ என்றும் ‘நீ நல்ல மருத்துவரைப் பாருடா டேய்’ என்றும் சகட்டுமேனிக்குப் பேசுகிறார் கண்ணியத்திற்குரிய சீமான். அநேகமாக அவர்கள் அனைவருமே டிஜிடல் ஊடகக்காரர்கள் என்றே கருதுகிறேன்.
டிஜிடல் ஊடகங்களே இல்லாமல், அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில், இப்படி ஒருவர் பேசியிருக்க முடியுமா அல்லது இப்படியெல்லாம் பேசுகிற அளவில் யாரேனும் இருந்தார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் எல்லா பத்திரிகைகளுக்கும் மரியாதை இருந்தது. ஒரு நிருபருக்குக் கொடுக்கும் மரியாதை என்பது அவர் வேலை பார்க்கும் பத்திரிகைக்குக் கொடுக்கும் மரியாதையாக இருந்தது. நிருபர்களை அவமானப் படுத்தினால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை அவமானப் படுத்தியதாகத்தான் அர்த்தம்.
சாதாரண அரசியல்வாதிகளெல்லாம் முன்னணிப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்திக்கவே முடியாது. அதிகபட்சமாக செய்தி ஆசிரியர்களைத்தான் சந்திக்க முடியும். இன்னும் சொல்லப் போனால், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் நபர்களின் தரத்தைக் கணக்கில் கொண்டுதான் பத்திரிகைகளிலிருந்து நிருபர்களே வருவார்கள்.
ஆனால் இன்று? டிஜிடல் ஊடகங்கள் வந்த பிறகு? வேண்டாம்…இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், வி.பி. சிங், சந்திரசேகர்…என்று பல தலைவர்களின் கண்ணியமான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டதால், இது பற்றிச் சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.!