தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘களப்பிரர்கள் காலம் தமிழகத்தின் இருண்ட காலமா?’

06:14 PM Apr 15, 2024 IST | admin
Advertisement

‘களப்பிரர்கள் காலம் தமிழகத்தின் இருண்ட காலம்’ என்றுதான் இதுவரை நமக்குச் சொல்லப்பட்டு வந்தது. ‘நடுவுல சில பக்கங்களைக் காணோம்’ என்பது போல, களப்பிரர்கள் ஆண்ட காலம் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றே பலரும் சாதித்து வந்தனர். கி.பி. 250 முதல் கி.பி. 600 முடியச் சுமார் முந்நூறு ஆண்டு காலம் ஆண்டவர்கள் பற்றிய தகவல்களும் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்கிற வரலாறும் எப்படி காணாமல் போகும்? இந்தக் கேள்வி பலரையும் குடையவே, ஆராய ஆரம்பித்தனர். அதில்தான் ‘இருண்ட காலம்’ என்கிற போர்வை போட்டு, உண்மைகளெல்லாம் திட்டமிட்டே மூடப் பட்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சியான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.

Advertisement

களப்பிரர்கள் யார்? அவர்கள் வேங்கட மலைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. யாராயிருந்தாலும் அவர்கள் தமிழர்கள் அல்லர். வெளியிலிருந்து வந்தவர்கள். என்றாலும் அன்றைய தமிழக மன்னர்களை வென்றிருக்கிறார்கள்; சுமார் முந்நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆண்ட அந்தக் காலம் உண்மையிலேயே இருண்ட காலம்தானா என்பதுதான் கேள்வி. களப்பிரர்கள் வருவதற்கு முன்பு தமிழர்கள் எப்படீ இருந்தார்கள்? இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பால் பேதமில்லாமல், பெண்பாற்புலவர்களும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.குந்தித் தின்று கும்பி வளர்த்தபடி, திண்ணை வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கவில்லை. மன்னர்களும் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டினார்கள். அவர்களின் வழிபாடு என்பது அவரவர் முன்னோரும் மூத்தோரும் மட்டுமே. உழைக்கும் மக்களைக் கசக்கிப் பிழிந்து, எந்த மன்னனும் கோவில் கட்டவில்லை. அதனால்தான் மக்களின் நலனுக்காகக் கரிகாலனால் கல்லணை கட்ட முடிந்தது.

Advertisement

கைபர், போலன் கணவாய்களின் வழியாகத் தங்கள் கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடிக் கொண்டு, இமயத்திற்குத் தெற்கே தமிழகம்வரை ஆரியக் கூட்டம் வந்தபோதுதான், அவர்களின் சனாதனம் ஆங்காங்கே விதைக்கப் பட்டது. அனைத்து மக்களின் சுயசிந்தனையையும் யாகத் தீயில் கருக வைத்தனர்.'பிரம்ம தேயம்’ என்கிற பெயரில், பல ஊர்களை மட்டுமல்ல; அங்கு வாழ்ந்த மக்களையும் மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர். அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் பெளத்தமும் சமணமும் வந்து பகுத்தறிவு பேசின. இதனால் அவர்களின் அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. என்றாலும் தங்களின் சாதுர்யத்தால் அதை ஒருவாறு சமாளித்து நிமிர்ந்தபோதுதான் களப்பிரர்கள் வந்து கலங்கடித்தனர்.

ஆட்சியைப் பிடித்த களப்பிரர்கள், பகுத்தறிவு பேசிய பெளத்த, சமணங்களை ஆதரித்தாலும் சனாதனத்தை ஓரங்கட்டினர். யாகத் தீயெல்லாம் அடங்கிப் போயின. பிரம்மதேயத்தின் பெயரால் தானமாக வழங்கப் பட்ட அனைத்தையும் பிடுங்கி, மீண்டும் அவற்றை அந்தந்த மக்களுக்கே சொந்தமாக்கினர். ஆக, களப்பிரர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்களே தவிர, மக்களுக்கு எதிரானவர்களாக இருததாக எந்த ஆதாரமும் இல்லை. இதுதான் உழைக்காமல் உண்டவர்களுக்குப் பிரச்னையாகிப் போனது. மற்ற மன்னர்களைப் போல களப்பிர மன்னர்களை அண்டிப் பிழைக்க முடியாமல் போனதால், அவர்களை வெறுக்க ஆரம்பித்தனர். போதாக்குறைக்கு, களப்பிரர்கள் பெளத்த சமண மதங்களை ஆதரித்ததால், சனாதனிகளின் வெறுப்பு மேலும் அதிகமானது.

இந்தக் காலகட்டத்தில்தான், எல்லா மன்னர்களின் ஆட்சிக் காலம் போலவே, களப்பிர மன்னர்களின் ஆட்சிக் காலமும் ஒரு முடிவுக்கு வந்தது. அதில் சனாதனிகளுக்கு ஏக குஷி. அதிகாரத்திற்கு வந்த தமிழ் மன்னர்களை மொய்க்க ஆரம்பித்தனர். அவர்களில் பலரையும் சனாதன வலைக்குள் சிக்க வைத்து, பெளத்தத்தையும் சமணத்தையும் விரட்ட ஆரம்பித்தனர். ஆனாலும் அது அத்தனை சுலபமாக நடக்கவில்லை. சமணராக இருந்த திருநாவுக்கரசரை, அவருடைய சகோதரி திலகவதியார்தான் மிகவும் கஷ்டப்பட்டு, சைவத்திற்குத் திருப்பினார் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு பெளத்தமும் சமணமும் வெறுக்கப்பட வேண்டியவையாகக் கட்டமைக்கப்பட்டன.

திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். அன்னை பார்வதிதேவியிடமே ஞானப்பால் குடித்ததாக சொல்லப்பட்டவர். அவர் பெளத்தத்தை எந்த அளவுக்கு வெறுத்தார் தெரியுமா?

“வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே”
“மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே”
ஞானப்பால் உண்டவரின் மனத்திலேயே இத்தனை வெறுப்பை விதைத்து வளர்க்க முடியுமானால் மற்றவர்கள் எம்மாத்திரம்?

களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சனாதனம் இப்படித்தான் தலையெடுத்தது. சைவத்தையும் வைணவத்தையும் தன்னோடு அணைத்துக் கொண்டு, நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் கொம்பு சீவிவிட்டு, பதிகங்களையும் பாசுரங்களையும் பாட வைத்தது. ஆதிசங்கரர் தோன்றி, இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்து, பெளத்த, சமணத்திற்கு எதிராக அத்வைதம் பேசி, சனாதன விதைகளைத் தூவினார். அவருக்கு அடுத்து விசிஷ்டாத்வைதம் பேசிய இராமானுஜர்; பிறகு துவைதம் பேசிய மத்வர்.

இவையெல்லாம் போதாதென்று, ஆங்காங்கே மடங்களும் ஸ்தபிக்கப்பட்டு, சனாதனம் சீராட்டப்பட்டது. இப்படி, பகுத்தறிவுக்கு எதிரான பலமுனைத் தாக்குதலின் மூலம், சனாதனம் தனது இருப்பை இறுக்கிக் கொண்டது. மன்னர்களையும் தனது வலைக்குள் சிக்க வைத்தது. கல்லணை கட்டி, காவிரிக்குக் கரையெடுத்த கரிகாலன் வழி வந்த மன்னர்கள் மக்களை மறந்தனர். மக்களுக்காகத் திறக்கப்பட வேண்டிய அரண்மனைக் கருவூலத்தை, சனாதனிகளுக்காகத் திறந்துவிட்டு, பெரிய பெரிய கோவில்களைக் கட்டினர். மக்களுக்கான செல்வங்கள் அனைத்தும் சனாதனிகளால் ஸ்வாகா செய்யப்பட்டன. பகுத்தறிவு பேசி, மக்களுக்குத் தொண்டாற்றிய சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். அனைத்து மக்களுக்குமானதாகத் திகழ்ந்த பெளத்த விகாரங்களும் சமணப் பள்ளிகளும் அழிக்கப் பட்டன. பகுத்தறிவுக்கு எதிரான இப்படியோர் அவலம் ஏழாம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது.

இவை மட்டுமா? கருவூலத்தைத் திறந்துவிட்ட மன்னனையே கருவறைக்கு வெளியே நிறுத்தி மடையனாக்கியது சனாதனம். ‘எனக்கே இந்த நிலையா?’ என்கிற அரண்மனையின் அதிகாரத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் தப்பிக்க, சாமர்த்தியமாக ஆகம விதிகள் போன்றவற்றை உருவாக்கியது. கண்டறியாத கடவுளுக்காகப் பெரிய பெரிய கோவில்களைக் கட்ட வைத்து, அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியில் உருகி உருகிப் பாடிய தேன் தமிழும் கருவறைக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டனர்.

இதற்கெல்லாம் ஒரே காரணம், அதிகாரம். ஆள்வோரையும் ஆட்டுவிக்க நினைக்கும் அதிகாரம். இந்த அதிகாரத்தைச் சனாதனம் கொடுக்கிறது. இப்படியோர் அதிகாரத்தை இழக்க அவர்கள் எப்படிச் சம்மதிப்பார்கள்? அதனால்தான், தனது அதிகாரத்தை முற்றிலுமாக இழந்து, சனாதனம் சப்தமில்லாமல் அடங்கிக் கிடந்த களப்பிரர்கள் காலத்தை ‘இருண்ட காலம்’ என்று உண்மையை மறைத்துக் கட்டமைத்தார்கள். உண்மையில், அது சனாதனத்திற்கு மட்டுமே இருண்ட காலம். பகுத்தறிவுக்கும் உழைக்கும் மக்களுக்கும் விழாக் காலம். இவற்றையெல்லாம் படித்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக்காகவே போராடிய, அந்த ஈரோட்டுக் கிழவனை நினைத்தால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

செ. இளங்கோவன்

Tags :
dark period in the history of Tamil NaduKalabhrasSanga periodterritories ruled by Tamil kingsThe history of Tamil Naduwho were the Kalabhras?
Advertisement
Next Article