அயோத்தி கோயில் முழுசாக கட்டி முடிக்காமல் திறப்பு விழாவா? சங்கராச்சாரியார்கள் பங்கேற்கவில்லை!
நாடெங்கிலுமுள்ள பலராலும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், வரும் ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்பது தெரிந்த விஷயமே.எனினும் அவரை தவிரஇந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட ஏறத்தாழ 7,000 விருந்தினர்கள், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, தினசரி 1,00,000 பக்தர்களை வரவேற்க அந்நகரம் தயாராகி வருகிறது. இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவில் நான்கு சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய இந்து மதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவில் அமைந்துள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி “ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருக்கும் விழாவுக்கு நான் செல்லப்போவதில்லை. எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு வருவதாக இருந்தால், ஒரு நபருடன் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு நபருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும் கூட, அந்நாளில் நான் அங்குச் செல்ல மாட்டேன். இதற்காக நான் சற்றும் கவலைப்படவில்லை. ஆனால், மற்ற சனாதன இந்துக்களைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பாக, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தன்னை மதச்சார்பற்றவராக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாதவர். அவர் தைரியமானவர், இந்துத்துவவாதி. அத்துடன், சிலை வழிபாட்டின் கருத்தாக்கத்தில் பெருமை கொள்கிறார். அவர் தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கோழை அல்ல. ஆனால், சங்கராச்சாரியார் என்ற முறையில் நான் அங்கு என்ன செய்வேன்? பிரதமர் மோடி சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது, நான் அவரை கைதட்டி வாழ்த்த வேண்டுமா?” என்று அவர் தெரிவித்திருந்த கருத்தின் சூடே இன்னும் தணியாத நிலையில் ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி ``அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சனாதன தர்மத்தை மீறி நடப்பதால், ஜனவரி 22ம் தேதி மிக முக்கியமான இந்து மத குருக்களான சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இந்து மதத்தின் நெறிமுறைகளை பின்பற்றுவது எங்கள் கடமை. இதனால் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது. கோவிலை கட்டி முடிக்காமல் ராமர் சிலைகளை நிறுவுவது இந்து மதத்திற்கு எதிரானது. ராமர் கோயிலை திறக்க அவ்வளவு அவசரம் தேவையில்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது, அதன் பிறகு தான் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.நிஷ்சலானந்தர், ஸ்கந்த புராணத்தின் படி, சடங்குகள் முறையாகச் செய்யப்படவில்லை என்றால், கெட்ட சகுனம் ஒரு சிலைக்குள் நுழையக்கூடும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் ஆக்கியுள்ளார்கள் என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.