சென்னிமலையை ஏசு மலையாக்க முயற்சியா? – வெகுண்டெழுந்த பொதுமக்கள் - வீடியோ!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புகழ் பெற்ற சென்னிமலை முருகன் திருக்கோவில். இந்நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறித்துவ போதகர் ஒருவர் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தாம் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவ போதகர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதில் 2 பேரைக் கைது செய்தனர்.
கிறிஸ்தவ போதகரைத் தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையின் பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசுமலை என மாற்ற வேண்டும் எனப் பேசியுள்ளனர். இதைக்கேட்ட முருக பக்தர்கள், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கொதித்துப்போய் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னிமலையைக் காப்பாற்றப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி சென்னிமலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்றவேண்டும் என்ற சர்ச்சை பேச்சுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், சென்னிமலையைக் காப்பாற்றுவோம் என்ற வீர முழக்கத்துடனும் சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் களத்தில் இறங்கினர். 13-ம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், ஊர் பொதுமக்கள் எனக் காவிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் பலரும், இந்து விரோத கும்பலுக்கு திமுக அரசு துணை போவதைச் சுட்டிக் காட்டினர். சென்னி மலை பெயரைக் கல்வாரி மலை அல்லது ஏசு மலை என மாற்ற வேண்டும் என்ற பேசியவர்களை திமுக அரசு ஏன் கைது செய்யவில்லை எனக் கண்டனம் தெரிவித்தனர். உயிரைக் கொடுத்தாவது சென்னிமலையை பாதுகாப்போம் என்று வீரமுழக்கம் எழுப்பினர்.
இதனிடையே, தற்போது, #சென்னி மலையை காப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக இணைய தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.