ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. மூடுபனி காரணமாக அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைசி, நேற்று ஈரான் அசர்பைஜன் நாடுகளுக்கு எல்லையில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பயணம் செய்த நிலையில், அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசேன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கிளம்பிய சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வந்த நிலையில், விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப் பகுதிகள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அந்நாட்டின் ராணுவம், விமானப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிக்காக குவிந்தனர். ரஷ்யா, ஈராக் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்தன
சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. விபத்து நிகழ்ந்த இடம் வனப்பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்த இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடம் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியை ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். ட்ரோன் மட்டுமல்லாது சாட்டிலைட் தொழில்நுட்பமும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை அடையாளம் காண உதவியது. சம்பவ இடத்தில் ஈரான் ராணுவம், மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர். ஹெலிகாப்டர் மலை மீது மோதி முழுவதுமாக உருக்குலைந்துள்ளது. அவரது மறைவு அந்த நாட்டு மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் ஈரான் உடன் இந்த நேரத்தில் நிற்பதாக தெரிவித்துள்ளன.
ஈரானின் புதிய அதிபர் யார்?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாவலராகவும் நாட்டின் ஷியைட் இறையாட்சிக்குள் அவரது பதவிக்கு சாத்தியமான வாரிசாகவும் ரைசி இருந்தார். ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் இறந்ததால், அந்நாட்டின் முதல் துணை அதிபரான முகமது மொக்பர் இடைக்கால அதிபராக செயல்பட உள்ளார். அடுத்த 50 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.